பக்கம்:வாழையடி வாழை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 "வாழையடி வாழை”

நெட்டைக் கனவின் நிகழ்ச்சியே குயிற்பாட்டு. காதலை வேண்டிக் கரையும் குயில், காதல் இன்றேல் சாதலை வேண்டித் தவிக்கின்றது. பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா’, என்று கூறும் பாரதியார், குயிற்பாட்டிலே அழகிய தத்துவ விளக்கம் காட்டி, பாட்டின் இறுதியில், கற்பனையே யானாலும் வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க இட முண்டா? என்ற வினா எழுப்பியுள்ளார்.

   இவ்வாறு உள்ளத்தில் உண்மையொளி பெற்று; வாக்கினிலே இனிமை கொண்டு பாடிய பாரதியாரின் பாடல்கள் இந்தத் தலைமுறையின் அரிய சொத்தாகும். பாரதியாரின் பாடல்கள் பல துறைகளையும் உள்ளடக்கியனவாகும். சொல்ல வந்த பொருளை அழகுடன் சொல்லி அழியாப் புகழ் பெற்ற அமர கவிஞர் பாரதியார்.
  பாரதியாரைக் குறித்துப் பாரதிதாசனர் புனைந்துள்ள கவிதை, பாரதியாரின் நலம் விரிக்கும் நயம் சான்று.

'தமிழகம்! தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும் தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில் இலகு பாரதிப் புலவன் தோன்றின்னா! பைந்தமிழ்த் தேர்ப் பாகன்; அவனொரு செந்தமிழ்த் தேனி, சிந்துக்குத் தந்தை! குவிக்கும் கவிதைக் குயில்; இந் நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவியரசு நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா காடு கமழும் கற்பூரச் சொற்கோ கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்: திறம்பாட வந்த மறவன்; புதிய அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற் படரும் சாதிப் படைக்கு மருந்து! மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்; அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்; என்னென்று சொல்வேன்! என்னென்று சொல்வேன்!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/50&oldid=1340044" இலிருந்து மீள்விக்கப்பட்டது