பக்கம்:வாழையடி வாழை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

‘வாழையடி வாழை’

நீதிகொள் என்றுலகை- அவள்
நிந்தனை செய்திடுவாள்.’

என்று காதலனுக்காகப் புலம்பும் தலைவி நம் கருத்தில் நிற்கின்றாள்.

தலைவனுக்கும் காதல் நெஞ்சம் இல்லாமற் போமா?

'வேல்விழியால் என்றன் விலாப்புறத்தைக் கொத்தாதே!
பால்போல் மொழியால் பதைக்கஉயிர் வாங்காதே!
கண்ணாடிக் கன்னத்தைக் காட்டி என் உள்ளத்தைப்
புண்ணாக்கிப் போடாதே! போபோ! மறைந்துவிடு!'

—பாரதிதாசன் கவிதைகள் : புரட்சிக்கவி


என்று, தலைவன் தலைவியின் அழகில்; காதலில் கட்டுண்டு கிடக்கிறான். மேலும்,

'கிட்டரிய காதற் கிழத்திஇடும் வேலைவிண்ணில்
விட்டெறிந்த கல்லைப் போல் மேலேறிப் பாயாதோ!
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர்கடுகாம்!’

—பாரதிதாசன் கவிதைகள்: சஞ்சீவி பர்வதத்தின் சாரல்


என்று காதலின் ஆற்றலை வடித்துத் தருகிறார், நம் எண்ணமெலாம் இனிக்கும் வண்ணத் தமிழ்க் கவிஞர்.

'ஒருவனும் ஒருத்தியுமாய் மனம் உவந்திடில் பிழையென உரைக்கலாகாது, ' என்றும், 'சாதல் எனில் இருவருமே சாதல் வேண்டும்; தவிர்வதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்' என்றும் கவிஞர் கூறுகின்றார்.

காதல் உணர்வு என்னும் உலகில் சாதல், வாழ்தல், துன்பம், மோதல், மேவல், மொய்த்தல், நீங்கல் முதலியன இல்லையென்று கூறும் கவிஞர், காதற் குற்றவாளிகளை நமக்குப் பின்வருமாறு அறிமுகப் படுத்துகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/82&oldid=1461259" இலிருந்து மீள்விக்கப்பட்டது