பக்கம்:வாழையடி வாழை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

‘வாழையடி வாழை’

'அகல்வானில் விட்டுவிட்டு மின்னல் போல
ஆங்காங்குச் சென்றுபின் மீண்டா ளாகிப்
பகல்வானம் மாணிக்கப் புனலா டுங்கால்
படர்முல்லை சிரித்திருக்கும் சோலை கண்டு
புகலானாள் குதிரையினை விட்டாள்; அங்குப்
புன்னைவர வேற்பளிக்கத் தென்றல் வந்து
துகிர் உடலில் மணந்தடவ இசைய ரங்கு
தும்பியர் துவக்கினார் அமர்ந்தாள் அன்னம்'

—பாண்டியன் பரிசு: 62 : 1


மாலையில் முல்லை. மலர்ந்த சோலையில் புன்னை மர நிழலில் அமர்ந்து தென்றற்காற்றால் சோர்வு நீங்கித் தும்பி பாடிய இசைப்பாட்டால் மனம் மகிழ்ந்தாள் தலைவி என்பதனை, எவ்வளவு இயற்கையாக, இயற்கையோடு இணைத்துப் பாடிவிட்டார் கவிஞர் என்பதனைக் காணும்போது, உள்ளத்தில் உவகை மலர்கின்றது.

'பாண்டியன் பரிசு' காப்பியத்தலைவன், கட்டழகன் வேலன், காப்பியத் தலைவி, அன்னத்திடம் காதல் மீதூரக் காதற்பேச்சினைக் கட்டுரைக்கின்றான் :

'கரும்பெடுத்துப் பிழிந்ததுவும் என்சொல் தானோ?
கனியெடுத்து வைத்ததுமென் இதழோ? இல்லை
அரும்பெடுத்துக் கொட்டியதும் என் சிரிப்போ?
அடியெடுத்தால் அழகெடுக்கும் அன்ன மே! உன்
சுரும்பெடுத்த இசைபோலும் சொல்லெ டுத்தால்
சுவைஎடுப்பாய் இருக்கும்; இனிக் கொஞ்சிப் பேசி
இரும்பெடுத்துச் செய்திருக்கும் என்றன் காதில்
இன்னமுதைப் பாய்ச்சாயோ? என்றான் வேலன்.”

—பாண்டியன் பரிசு: 66


பாவேந்தர் பாரதிதாசனாரின் 'சேர தாண்டவம்’ ஓர் ஒப்பற்ற காதற்கதை. கவிதை நலங் கெழுமிய உரை நடையில் 'ஆதிமந்தி —ஆட்டனத்தி வரலாறு இந்நூலில் கூறப்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/84&oldid=1461261" இலிருந்து மீள்விக்கப்பட்டது