பக்கம்:வாழையடி வாழை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் பாரதிதாசனார் 83


பெண் வருணனை கவிதைத் தமிழில் கவினுறக் கிளத்தப்படுகின்றது. ஆதிமந்தியைப் பற்றிய அழகு ஒவியம் இது:

"தச்சுக்கலை! அவளை நோக்கி அது புதுக்கப்பட வேண்டும். ஏறிட்டுப் பார்க்கும்போதெல்லாம் அவள் இருவிழிகள் இதழ் விரிந்த செந்தாமரைகள்! எதிர் நோக்கிச் சாயும் அவள் பார்வை, காதல் முழங்கி, காண்பார் உளத்தில் மின்னிப் பொழியும் அமுத மழை! நெற்றிக்கு மேல் அமைந்த கருங்குழல் நிலவுக்கு மேலமைந்த கருமுகில்; புன்சிரிப்பில் முத்துப் பிறக்கும்; மாணிக்கம் சிந்தும்; வாய் விட்டுச் சிரிக்கையில் இளைஞர் உள்ளம் அதிர்கிறது! பொன்னோ, தன் வன்மை இழந்து, மென்மை அடைந்து, மெருகுடன் அமைந்ததோ என்னும் கன்னம்; சின்ன இடை கொடிபோல அசையப் பொன்னாடையும், பன்மணி நகைகளும் சுமந்து, சிலம்பு பண்பாட, அவள் நடக்கையில் வல்லவன் ஆக்கிய ஓவியமே நடக்கக் கண்டோம்.”

இவ்வாறு பெண்ணைக் கிளர்ச்சியுடன் வருணிக்கும் கவிஞர், காதல் உரையாடல்களிலும் சிலேடை நயம் வைத்து, நம் சிந்தையைக் குளிர்விக்கின்றார். பின் வரும் உரையாடலைக் காண்க:

ஆதிமந்தி : சோறும் கறியும் கொதிப்பதும் வேவது மாயிருக்கின்றன.

தோழி : ஆதிமந்தி, அவரிடம் சொன்னேன் அங்கே கொதிக்கிறது என்று. 'இங்கே மட்டும் என்ன குளிர்கிறதோ! இங்குந்தான் என் நெஞ்சம் கொதிக்கிறது' என்று சிடுசிடு என்று கூறினார்.

ஆதிமந்தி : ஐயையோ! ஒடு, ஒடு! இறக்கும் நேரம்; ‘இதோ வந்துவிட்டாள் ஆதிமந்தி,' என்று கூறி விட்டு வா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/85&oldid=1461262" இலிருந்து மீள்விக்கப்பட்டது