பக்கம்:வாழையடி வாழை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் பாரதிதாசனார் 95


என்று பாடும் அவர், ஆண் குழந்தைத் தாலாட்டில்

'எல்லாம் அவன்செயலே என்று பிறர்பொருளை
வெல்லம்போல் அள்ளி விழுங்கும் மனிதருக்கும்,,
காப்பார் கடவுள்உமைக் கட்டையில்நீர் போகுமட்டும்
வேப்பீர், உழைப்பீர் எனஉ ரைக்கும் வீணருக்கும்,
மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த
தேனின் பெருக்கே! என் செந்தமிழே கண்ணுறங்கு!’

என்று மூட மடமைக்கு முதலிற் சாவுமணி அடிக்கிறார்,

அடுத்துச் சாதி பேதச் சமயச் சழக்கினைக் கடிகிறார். 'பகுத்தறிவு ஒன்றே இப்பேய்களை வெருட்டி ஓட்டுவதாகும்' என்று ஓங்கி முழக்கமிடுகிறார் புரட்சிக் கவிஞர்:

“இருட்டறையில் உள்ளதடா உலகம்! சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே!
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின் றாரே!
வாயடியும் கையடியும் மறைவ தெந்நாள்?
சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்தவற்றை:
சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார் தம்மை
வெருட்டுவது பகுத்தறிவே! இல்லை யாயின்
விடுதலையும் கெடுதலையும் ஒன்றே யாகும்,’’

—பாண்டியன் பரிசு: இயல் 56 : 3


'பொதுநலம் பேணாமல், தன்னலத்தைக் கொண்டிருப்போன் கடுகு போன்று சிறுத்த உள்ளத்தினன், என்றும், 'அவனால் எவருக்கும் பயனில்லை', என்றும் கூறுகிறார்:

‘தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்தியம் இவையுண்டு தானுண் டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!’

—பாரதிதாசன் கவிதைகள்:உலக ஒற்றுமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/97&oldid=1461272" இலிருந்து மீள்விக்கப்பட்டது