பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 195 1936 முதலே நான் பிச்சமூர்த்தியின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தேன். மணிக்கொடி பத்திரிகையில் வெளிவந்திருந்த அவருடைய சிறுகதைகளும் வசனகவிதைகளும் என்னை வசீகரித்திருந்தன. 1937இல் தினமணி ஆண்டு மலரில் வெளிவந்த பிre'வின் கிளிக்கூண்டு என்ற வசனகவிதை என்னில் தாக்கம் ஏற்படுத்தியது. நானும் கவிதை எழுதவேண்டும் என்ற உந்துதலை அது என்னுள் தந்தது. ஆகவே பிச்சமூர்த்தியின் அறிமுகமும் அவருடன் பேசிப்பழகும் வாய்ப்பும் கிட்டியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. நீண்ட முடியும் தாடியுமாக அவர் ஒரு ரிஷி போல் காட்சியளித்தார். அவருடைய முகத்தோற்றம் கவி தாகூரின் சாயலைக் கொண்டிருந்தது. அவர் என்னிடம் சகஜமாகப் பழகினார். வயது வித்தியாசத்தைக் கருதாது அவர் ஒரு நண்பனாகவே நடந்து கொண்டார். ந. பிச்சமூர்த்தி கிராம ஊழியன் இதழுக்குத் தொடர்ந்து கவிதைகள், கட்டுரைகள் எழுதி உதவினார். மனநிழல்' என்கிற புதுரகமான- கதையும் அல்லாத கட்டுரையுமில்லாத, ஆயினும் இரண்டின் தன்மைகளையும் கொண்டிருந்த வாழ்க்கைச் சித்திரங்களை எழுதி வந்தார். பொங்கல் மலர் மூலம் விளம்பர வருமானம் கிடைத்திருந்தது. அதனால் ஆண்டு மலர் என்று ஒன்று தயாரித்து விளம்பரங்கள் சேகரித்துப் பத்திரிகையின் வருமானத்தை அதிகப்படுத்தலாம் என்று திருலோகம் திட்டமிட்டார். ரெட்டியார் அதை ஏற்றுக் கொண்டார். இலக்கிய மலருக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, தினமணி ஆண்டு மலர்கள் விளங்கின. அம்மலர்களைப் போன்ற சிறப்பான இலக்கிய மலராக கிராம ஊழியன் ஆண்டு மலரும் அமைய வேண்டும் என்று நான் விரும்பினேன். ". மலருக்கான ஆரம்ப வேலைகள் உற்சாகமாக நடைபெற்றன. இதற்கிடையில், கு.ப. ராஜகோபாலன் இறந்துபோனதால் சிரமப்பட்ட அவரது குடும்பத்துக்கு உதவி புரிவதற்காக நிதி வசூல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. - நிதி அதிகம் சேரவில்லை. கிடைத்த தொகை கு.ப.ரா. குடும்பத்துக்கு வழங்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா. இவர்களின் நண்பரும் மணிக்கொடி எழுத்தாளர்களில் மற்றொருவருமான சிட்டி பெ.கோ. சுந்தரராஜன் துறையூருக்கு வந்து போனார். அவர் திருச்சி வானொலியில் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவரும் என்னை நண்பராக ஏற்றுக் கொண்டார்.