பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 露2。 ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். நல்ல பல மாறுதல்களுடன் ஊழியன் திருச்சியில் இருந்து வெளிவரும் வரும் தேதி பற்றிப் பின்னர் அறிவிப்போம் என்று அந்த அறிக்கை கூறியது. அதுதான் கிராம ஊழியன் கடைசி இதழ். அது வெளியான தேதி 1947 மே15, கிராம ஊழியன் நின்று விட்ட பிறகும், நான் பல மாத காலம் துறையூரிலேயே வசித்தேன். 'சாந்தி நிலைய வெளியீடுகள் நன்கு விற்பனையாகிக் கொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் இரண்டாயிரம் ரூபாய் இருந்தால் எனது எழுத்துக்களைப் புத்தகங்களாக வெளியிடும் முயற்சியைத் தீவிரப்படுத்தி, நல்ல நல்ல புத்தகங்களைப் பிரசுரித்திருக்கலாம். ஆனால் ஆயிரம் ரூபாய்கூடக் கிடைக்க வழிஇல்லை. அதனால் நூல் வெளியீட்டுத் திட்டம் வளராமலே இருந்தது. துறையூரில் தனியாக இருப்பதைவிட சென்னைக்கே வந்துவிடலாம். புத்தகங்கள் வெளியிட விரும்பினால், சென்னையிலிருந்தே அதைச் செய்யலாம் என்று என் அண்ணா எழுதினார். சினிமா உலகம் 1946 இறுதியில் மீண்டும் சென்னைக்கே வந்திருந்தது. 1947 ஆகஸ்டில் இந்தியா சுதந்திரம் பெற்றது. அந்நிகழ்ச்சி சென்னையில் விசேஷமாகக் கொண்டாடப்பட்டது. சுதந்திரத் திருவிழாக் கோலாகலங்களைக் கண்டு களிக்க நான் முன்கூட்டியே சென்னைக்கு வந்துவிடுவது நல்லது என்று என் அண்ணா அழைத்திருந்தார். ஆனாலும் அப்போது நான் சென்னைக்கு வரவில்லை. சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நான் துறையூரில்தான் இருந்தேன். எனது சென்னைப் பயணத்தைத் துரிதப்படுத்தும்படி வேறு சிலரும் துண்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் எம்.கே.டி. சுப்பிரமணியன் முக்கியமானவர். அவர் திராவிடக் கழகத்தைச் சேர்ந்திருந்தார். கோரநாதன் எழுத்துக்கள் அவரை வசீகரித்திருந்தன. அந்நாட்களில் பலரும் உற்சாகமாகப் பத்திரிகைகள் ஆரம்பித்து நடத்தினார்கள். எம்.கே.டி. சுப்பிரமணியனும், பகுத்தறிவுக் கொள்கைகளைப் பிரசாரம் செய்வதற்காக ஒரு பத்திரிகை நடத்த ஆசைப்பட்டார். அதற்குக் கோரநாதனை ஆசிரியராக்க வேண்டும் என அவர் விரும்பினார். கோரநாதன் திராவிடக் கழக இயக்கத்தை ஆதரித்து எழுதியதில்லை. ஆயினும் கோரநாதன் சிந்தனைகளும் எழுத்தும் பகுத்தறிவுக் கொள்கைகளுக்குச் சாதகமாக இருந்தன. கோரநாதன் எழுத்துக்கள் வேகமும் விறுவிறுப்பும், சூடும் சுவையும் கொண்டு வாசகர்களைப் பெரிதும் ஈர்த்தன. இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார் எம்.கே.டி. சுப்பிரமணியன். எனக்குத் திரும்பத் திரும்பக் கடிதங்கள் எழுதினார்.