பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை எனக்கு எழுபது வயது நிறைவுற்றதும் நான் எனது சுயசரிதையை எழுதவேண்டும் என்று நண்பர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். அதற்கு முன்பிருந்தே கவிஞர் சுரதா என்னைக் காணநேர்ந்த போதெல்லாம் நான் தன்வரலாற்று நூல் எழுத வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். அப்போதெல்லாம் நான் ஏதாவது பதில் சொன்னேனே தவிர, என்னுடைய சுயசரிதையை எழுத வேண்டும் என்பதில் நான் ஆர்வம் கொண்டதில்லை. - அந்தச் சந்தர்ப்பத்தில்தான் நண்பர் மு. பரமசிவம் எனது வாழ்க்கை வரலாற்றை விரிவாகவும் சிறப்பான முறையிலும் எழுதி முடித்தார். அதை மதிப்புக்கு உரிய நண்பர் டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ் எழுத்துச்செல்வர் வல்லிக்கண்ணன் என்ற பெயரில் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் வெளியீடாகப் பிரசுரம் செய்தார். என் வரலாறு பற்றி என்னிடம் குறிப்பிட்ட நண்பர்கள் பலருக்கும் அதுதான் புத்தகமாக வந்துவிட்டதே என்று சொல்லலானேன். மு. பரமசிவம் உங்கள் வரலாற்றைச் சிறப்பாகவே எழுதியிருக்கிறார்; ஆனாலும் உங்கள் வரலாற்றை நீங்களே எழுதுவது இன்னும் சிறப்பாக அமையும்; அது பயனுள்ளதாகவும் இருக்கக்கூடும்; இப்பொழுதே எழுத்த் தொடங்கிவிடுங்கள் என்று நண்பர்கள் விடாது கூறிவந்தார்கள். தன்வரலாறு எழுதப்பட வேண்டிய அளவுக்கு நான் பிரமாதமாக எதுவும் செய்துவிடவில்லை. நான் ஒரு சாதாரணன்; எனது வாழ்க்கை விசேஷ நிகழ்வுகள் இல்லாத சகஜமான வாழ்க்கைதான்; புத்தகமாக எழுதுவதற்குச் சுவாரசியமான சமாச்சாரங்கள் எவையும் என் வரலாற்றில் இரா என்று நான் குறிப்பிடுவது வழக்கம்.