பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 வாழ்க்கைச் சுவடுகள் ஒளியில் அமர்ந்து சகல விஷயங்கள் பற்றியும் உரையாடி மகிழ்ந்த பொழுதுகள் மிக இனிமையானவை. யோகியார் வருகிறபோதெல்லாம் நான் ஏதாவது எழுதிக்கொண்டு அல்லது படித்துக்கொண்டிருப்பேன். என்னய்யா எப்ப பார்த்தாலும் எழுத்தும் படிப்பும் நாங்கள் எல்லாம் எழுதி என்ன கண்டுவிட்டோம்? தமிழ்நாட்டில் யார் என்ன எழுதினாலும் உரிய கவனிப்பு கிடைக்காது. பாரதிக்குக் கிடைத்ததா? கம்பனுக்குக் கிடைத்ததா? என்று சொல்வார். மேலும் அவர் விரக்தியோடு பேசுவார். கம்பன் ஒரு தப்பு செய்து விட்டான். மிகப் பிரமாதமான ஒரு காவியத்தைத் தமிழில் எழுதி வைத்தான். இது போன்ற ஒரு மாகாவியம் உலகின் வேறு எந்த மொழியிலாவது படைக்கப்பட்டிருக்குமானால், எந்தக் காலத்திலோ பெரும் புகழ் பெற்றிருக்கும். தமிழர்களுக்கு நல்ல விஷயங்களை ரசிக்கத் தெரியாது. இப்படி அவர் தமது மனக்குமைதல்களை வெளிப்படுத்துவார். கம்பனிடம் சது.க. யோகியார் பக்தியே கொண்டிருந்தார் என்று சொல்லலாம். 'கம்பன் ஒரு மகாகவி, மகா கவிகள் போற்றும் கவிச்சக்கரவர்த்தி, கவிச்சக்கரவர்த்திகள் தொழுதேற்றும் கவிக் கடவுள். கம்பனே அடியேனது கவிதைத் தெய்வம் என்று அவர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 1948 இறுதியில் தி.க, சிவசங்கரன் சென்னை வந்து சேர்ந்தார். அவர் திருநெல்வேலியில் தாம்கோஸ்பாங்கில் கேஷியர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். உத்தியோகம் சம்பந்தமாக இடமாற்றம் பெற்றுச் சென்னைக்கிளைக்கு வந்தார். அவரும் எங்களோடு தங்கினார். மூன்று பேரும் சினிமா உலகம் அலுவலகத்திலேயே தங்குவது முறையல்ல என்று கருதி, வேறு தங்குமிடம் தேடினோம். பம்மல் ஊரிலிருந்து தினசரி சென்னைக்கு வந்துபோய்க்கொண்டிருந்த நண்பர் டி.ஆர். நடராஜன், பல்லாவரத்தில் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் ஓர் அறை வாடகைக்குக் கிடைக்கும் என்று போர்டு மாட்டியிருந்தது கண்டு அந்த இடம் வசதியாக இருக்கும் என்று தெரிவித்தார். அவருடன் பல்லாவரம் போய் அந்த இடத்தைப் பார்த்தோம். எங்களுக்குப் பிடித்திருந்தது. அதையே அமர்த்தி, அங்குக் குடியேறினோம். அருகில் இருந்த ஒட்டலைச் சேர்ந்த தனிக்கட்டிடம் அது. ஒட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கீழ்ப்பகுதியில் தங்கியிருந்தார்கள். மாடி வாடகைக்கு விடப்பட்டது. அது வசதியாக இருந்தது. பல்லாவரத்துக்கும் எழும்பூர் ஸ்டேஷனுக்கும் போய்வர எலெக்ட்ரிக் ரயிலில் சீசன் டிக்கட் வாங்கிக் கொண்டோம். தி.க.சி, கோட்டை ஸ்டேஷன் வரை போக வர டிக்கெட் வாங்கினார். தினசரி மின்சார ரயிலில் பயணம் செய்வது உல்லாச அனுபவமாகவே இருந்தது.