பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

茂密给 வாழ்க்கைச் சுவடுகள் அமைத்துப் பாரதியார் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்ற உரிமைப் போராட்டம். டி.கே.எஸ் சகோதரர்கள் பில்கணன் திரைப்படம் எடுத்தார்கள். அதில் பாரதியார் பாடல்களைச் சேர்த்திருந்தார்கள். அப்படி பாரதி பாடல்களை உபயோகித்திருப்பது உரிமை மீறல் ஆகும் பாரதியார் பாடல்களின் உரிமை தம்மிடம் இருக்கிறது. அவற்றை மற்றவர்கள் நாடகம், சினிமா முதலியவற்றுக்காகப் பயன்படுத்துவது சட்டப்படிக் குற்றமாகும் என்று திரைப்படத் தொழில் அதிபர் ஏவி. மெய்யப்ப செட்டியார் வழக்குத் தொடர்ந்தார். டி.கே. சண்முகம் நாரணதுரைக்கண்ணன் ஆலோசனையை ஏற்று எழுத்தாளர்கள் பத்திரிகைக்காரர்கள் ஆதரவை நாடினார். சுதந்திரக் கவிஞரான பாரதியின் பாடல்கள் தனிப்பட்டவர்களிடம் அடிமைப்பட்டிருப்பது சரியல்ல. அவை நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே எழுத்தாளர்கள் சிலர் குரல் கொடுத்து வந்தார்கள். இப்போது உரிமையை மீட்பதற்காகப் போராட வேண்டிய காலம் வந்துவிட்டது என்ற உணர்ச்சி ஏற்பட்டது. எனவே பாரதி விடுதலைக் கழகம் அமைக்கப்பட்டது. நாரண துரைக்கண்ணன் அதன் தலைவராகவும், திருலோக சீதாராம்-வல்லிக்கண்ணன் செயலாளர்களாகவும், எழுத்தாளர்கள் பலரும் உறுப்பினர்களாகவும் இருந்து செயலாற்றியது அவ் அமைப்பு. முக்கிய எழுத்தாளர்கள் பலரும் உற்சாகத்தோடு ஒத்துழைத்தார்கள். பத்திரிகைகள் துணை நின்றன. தினப்பத்திரிகைகள் தலையங்கம் தீட்டி ஆதரவளித்தன. பாரதி விடுதலைக்கழகத்தினர் காங்கிரஸ் தலைவர் காமராஜ் அவர்களையும், தமிழ்நாடு முதலமைச்சர் ஓமந்துர் ராமசாமி ரெட்டியார் அவர்களையும் சந்தித்துக் கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர்களும் ஏற்று ஆதரவு காட்டினார்கள். பாரதியாரின் மனைவி உயிரோடிருக்கிறார்; பாரதி பாடல்களை நாட்டுடைமை ஆக்குவதில் அவருக்கு ஆட்சேபம் எதுவுமில்லை என்று ஒப்புதல் கடிதம் எழுதி வாங்கிவரும்படி ராமசாமி ரெட்டியார் தெரிவித்தார். கடிதம் கிடைத்ததும் ஆவன செய்யலாம் என்று உறுதிகூறினார். பாரதியார் மணைவி செல்லம்மாள் பாரதியும், அவர் மூத்தமகள் தங்கம்மா பாரதியும் அப்போது திருநெல்வேலியில் வசித்தார்கள். அவர்களைச் சந்தித்து இசைவுக் கடிதம் பெறுவதற்காகச் சென்னையிலிருந்து ஒரு குழு புறப்பட்டுச் சென்றது. பாரதி விடுதலைக் கழகத்தின் தலைவர் நாரண துரைக்கண்ணன், துணைத் தலைவர் பேராசிரியர் அ. சீனிவாசராகவன், செயலாளர் வல்லிக்கண்ணன், நடிகர் டி.கே. சண்முகம், திருச்சி வானொலியில் பணியாற்றிவந்த மாறன் எனும் புனைபெயர் கொண்ட கே.பி. கணபதி ஆகியோரே அக்குழுவினர்.