பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 34; இல்லை. கேன்சல் பண்ணிவிட்டோம். இதனாலே உங்களுக்கு வேலை இல்லை. நீங்கள் போகலாம் என்று அந்தப் பெண்களை அனுப்பிவைத்தார். அவர்கள் ஏமாற்றத்தோடு சோகமாய்த் திரும்பிச் சென்றார்கள். பால்காரரிடம் இன்னிக்குப் பால் வேண்டாம். வேண்டும் என்கிற போது சொல்லி அனுப்புகிறேன்' என்று கூறி அவரையும் அனுப்பி விட்டார். மற்றவர்களின் சிரமங்கள், உணர்வுகள், காலநஷ்டம் இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாத படாதிபதியின் போக்கு என் மனசில் உறுத்தல் ஏற்படுத்தியது. அவர் என்னிடம் படக்கதையில் வரும் ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார். 'காதல் கொண்ட இருவர் சந்திக்கிறார்கள் அவர்கள் பேச்சு சுவாரசியமாக இருக்க வேண்டும் இரட்டை அர்த்தம் தொனிக்கிறபடி வசனம் எழுதிக்கொண்டு வாங்க. அதைப் பார்த்துவிட்டு அப்புறம் சொல்வோம்' என்றார். எனக்கு எழுத விருப்பமில்லை. அதனால் அவரைப் பார்க்கப் போகவேயில்லை. நான்கு நாட்கள் கழித்து நாகூர் மீண்டும் வந்தார். 'என்ன லாவண்யா பிக்சர்ஸ்காரர் வரச்சொல்லியிருந்தாராம் நீங்க போகலியாமே? ஏன்? என்று கேட்டார். 'ஏதோ புராணப்படம் எடுக்கிறாங்க அதுக்கு வசனம் எழுத நான் விரும்பலே' என்று சொல்லிவைத்தேன். 'புராணப்படமானால் என்ன பெரிய பகுத்தறிவு-சுயமரியாதைவாதியான பாரதிதாசனே புராணப்படங்களுக்குக் கதை வசனம் எழுதுறாரு நீங்க ஏன் எழுதக்கூடாது?’ என்று அவர் வாதாடினார். 'யாரும் எப்படியும் எழுதிவிட்டுப் போகட்டும். எனக்கு இது இஷ்டமில்லை. சினிமாவுக்குக் கதை வசனம் எழுதவே நான் விரும்பலே. எனக்குப் பிடிக்காததை நான் செய்ய மாட்டேன்' என்று நான் உறுதியாய்த் தெரிவித்தேன். அவர் ஏதேதோ சொன்னார். நான் என் மனசை மாற்றிக் கொள்ளவில்லை. வருத்தப்பட்டபடி நாகூர் போய் விட்டார். அதன் பிறகு நான் அவரைக் காண நேர்ந்ததே இல்லை. அவர் மூலம் விஷயம் அறிந்த நண்பர் கணபதி எனக்காக அனுதாபப்பட்டார். 'அவர்கள் போக்கின்படி எழுதிக் கொடுத்தால் பணம் கிடைக்கும். பணம் அதிகம் சேர்ந்தபிறகு, உங்கள் இலட்சிய நோக்கின்படி காரியங்களைச் செய்யலாமே. இப்போது பணம் கிடைக்கிற வழியில் செல்ல மறுப்பானேன்? என்று நண்பர் தர்க்கித்தார். -