பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 143 அவரது உறவினர் கண்ணபிரான், மகன் மணவாளன் அவர் மனைவி மக்கள் முதலியோர் வேறொரு தனி வீட்டில் வசித்தார்கள். காலை நேரம் வெகு சுறுசுறுப்பாக இருக்கும் தோட்டத்தில், கீரை வியாபாரம், கத்திரிக்காய் பறித்து சந்தைக்குக் கொண்டு போவது, பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது, இதர தோட்ட வேலைகள் என்று உழைப்பாளிகள் இயங்கிக்கொண்டிருப்பார்கள். நகரத்தின் பரபரப்பான சூழலையும் நெருக்கடியையும் கடந்து உள்ளே வந்தால், முற்றிலும் மாறான கிராமியச் சூழ்நிலை பெற்று அழகுடனும் அமைதியோடும் விளங்கியது அந்த இடம். அதில் ஓர் ஆசிரமம் போல் அமைந்திருந்தது நாங்கள் குடியிருந்த சிற்றில், கண்ணபிரான் சென்னை டிராம்வண்டிப் போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிந்தார். தொழிற்சங்க ஈடுபாடு உடையவர். அதனால் பத்திரிகைகள் படித்தல், அரசியல் கட்சிகள் பற்றிய அறிவு, பொதுவாழ்வில் அக்கறை முதலியன கொண்டவராக இருந்தார். எங்களிடம் நண்பராகப் பழகினார். சிறிதுநாட்களில் டிராம் கம்பெனி வேலையிலிருந்து ஒய்வு பெற்று வீட்டோடிருந்து பயிர்த்தொழிலைக் கவனித்து வந்தார். மகன் மணவாளனும் டிராம்வேயில் கண்டக்டர் வேலை பார்த்தார். அவருடைய இயல்புகள் வேறானவை. எல்லம்மாளும் அவரது குடும்பத்தினர் அனைவரும் எங்களிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டு, மிகுந்த அன்புடன் பழகிவந்தனர். பயிர்களுக்குத் தண்ணீர் பாய்வதற்கு தொலைவில் தெரு ஓரத்திலிருந்த ஒரு கிணற்றிலிருந்து குழாய் பதிக்கப்பட்டு வசதி செய்திருந்தார்கள். மோட்டார் வைத்துக் கிணற்று நீர் அதன் வழியாகப் பாய்ச்சப்பட்டது. தோட்டத்தின் ஆரம்பத்தில், வீடுகளின் பக்கம், ஆழமும் நீளமும் கொண்ட ஒரு தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. குழாய் வழியாக வரும் தண்ணீர், தொட்டியில் விழும், தொட்டி நிறைந்த பிறகு கால்வாய் வழி தோட்டத்துக்கு ஓடும். தொட்டியில் விழுகிற தண்ணீர் குளுமையாய்ச் சுத்தமாக இருக்கும். தொட்டியில் ஆழ்ந்து மூழ்கிக் குளிக்கலாம். அப்படி நீராடி மகிழ்வது இனிய சுகானுபவமாக இருந்தது. என் அண்ணாவின் சினிமா உலகம் வேலை ஒரு முடிவுக்கு வரவேண்டிய காலம் நெருங்கியிருந்தது. அந்தப் பத்திரிகை சீராக நடைபெறுவதில் சறுக்கல் கண்டது. ஆசிரியர் பி.எஸ். செட்டியார், பத்திரிகைக்கென்று தனி அலுவலகம் வைத்திருப்பது வீணான பணச்செலவு என எண்ணத்தொடங்கினார். அதனால், பத்திரிகையையும் அவர் குடும்பத்தோடு குடியிருந்த மயிலாப்பூர் அப்பர்சாமி கோயில் தெரு வீட்டுக்கு மாற்றிவிடத் திட்டமிட்டார். அவ்விதமே செய்தார். அண்ணா, சினிமா உலகம் பத்திரிகை அச்சிடப்பட்ட ராயல் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலைக்குச் சேர்ந்தார்.