பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i54 வாழ்க்கைச் சுவடுகள் தொடர்ந்து வரமுடிந்தது என்றால், அந்தப் பத்திரிகை மகத்தான வெற்றி என்றே மதிக்கப்படவேண்டும். பணவசதி இல்லாமல், எழுத்தாற்றலையும் இலட்சிய வேகத்தையும் கனவுகளையும் துணைக்கொண்டு எந்த எழுத்தாளர் பத்திரிகை நடத்த முனைந்தாலும், அது தோல்வியாகவே முடியும். இதைப் பத்திரிகை வரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. உண்மை நிலைமைகளைத் தெரிந்து கொண்டே நானும் ஏன் விழலுக்கு நீர் பாய்ச்சி மாய வேண்டும்? என்பதே என் பதிலாக இருந்தது. புத்தகங்கள் வெளியிடும் எனது முயற்சியே பணபலம் இல்லாத காரணத்தால் நல்லமுறையில் வளரமுடியாத நிலையில்தான் இருந்தது. எனது கதைகளைத் தொகுத்துப் பெரிய புத்தகமாகக் கொண்டுவர வசதிப்படவில்லை. நாவல்களைப் புத்தகமாக்குவதற்கு வசதிகள் இல்லை. சின்னச் சின்ன வெளியீடுகளே 'சாந்தி நிலையம் பிரசுரங்களாக வந்தன. நண்பர் எம். சூரியும், பணபலம் போதுமான அளவு இல்லாததால் சிறுசிறு புத்தகங்களையே வெளியிட்டுக் கொண்டிருந்தார். சூரி வெளியிட்ட பெரிய புத்தகம், என் அண்ணா அசோகன் தமிழாக்கிய மாக்சிம் கார்க்கியின் லோயர் டெப்த்ஸ் நாடகம் தான். 'அதலபாதாளம்' என்ற பெயரில் அது புத்தகமாக வந்தது. 'ஹனுமான் வார இதழில் நான் எழுதிய தொடர்கதை செவ்வானம்' துறையூர் எரிமலைப் பதிப்பகம் தோழர்களால் 1951இல் புத்தகமாக வெளியிடப்பட்டது. அது பெரிய புத்தகம் தான். நீங்கள் ஒதுங்கியிருந்தபடியே என் எழுத்துக்கள் புத்தகங்களாக வரவேண்டும்-வரவில்லையே என்று சொல்லிக் கொண்டிருப்பதால் பயனில்லை. புத்தகம் வெளியிடுவோரைப் - பதிப்பக அதிபர்களைப் போய்ப் பார்த்துப் பேச வேண்டும். உங்கள் எழுத்துக்களைப் புத்தகங்களாக வெளியிடும்படி கோரிக்கை வைக்கவேண்டும். அவர்கள் வியாபாரிகள். நீங்கள் ஒருதடவை இரண்டு தடவை போய்ப்பார்த்து வேண்டுதல் செய்தால் போதாது. பலமுறை பார்க்கவேண்டும். அவர்களது விருப்பு வெறுப்புகளுக்கத் தக்கபடி பேசி, அவர்களது பேச்சைக் கேட்டு சந்தோஷப்பட வேண்டும். அப்புறம் அவர்கள் உங்கள் எழுத்துக்களைப் புத்தகமாக வெளியிட மனம்கொள்வார்கள் என்று ஒரு அனுபவசாலி விவரித்தார். - இவை எல்லாம் எனக்கு உவப்பான காரியங்கள் இல்லை. பத்திரிகை அலுவலகங்கள், பதிப்பகங்கள் முதலியவைகளுக்குப் படைஎடுக்கவோ 'முற்றுகையிடவோ நான் விரும்பியதில்லை.