பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் #5? இலக்கியத்தை முதன்மைப் பணியாகத் தேர்ந்து கொண்ட பத்திரிகைகள் 'மறுமலர்ச்சி இலக்கிய இதழ்கள் என்று கூறிக் கொண்டன. அவற்றில் எழுதியவர்கள் மறுமலர்ச்சி இலக்கிய எழுத்தாளர்கள் என அறியப்பட்டனர். தமிழில் கவி பாரதியார் அனைத்துத் துறைகளின் மறுமலர்ச்சிக்காகவும் எழுத்து மூலம் சிந்தனை ஒளி பரப்பினார். அவருக்குப் பின் வந்து, அவர் காட்டிய வழியில் நடக்க முனைந்த இலக்கியவாதிகள் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று பெயர் பெற்றார்கள். காங்கிரசின் வழிமுறைகளிலும் காந்தியின் வழிகாட்டலிலும் நம்பிக்கை இழந்து, எதிர்ப்புக் காட்டி, தத்தம் வழியில் செயல்பட முற்பட்ட கட்சிகளும் செல்வாக்குப் பெற்று வந்தன. அகில இந்திய ரீதியில் கம்யூனிஸ்டுக் கட்சி சக்தி பெற்று வளர்ந்து கொண்டிருந்தது. தமிழ் நாட்டில் கம்யூனிஸ்டுக் கட்சியோடு போட்டியிட்டு வேகவளர்ச்சி பெற்று வந்தது பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்களின் தலைமையில் இயங்கிய திராவிட இயக்கம். ஈ.வெ.ரா. பெரியாரின் சிந்தனைகளும் செயல்முறைகளும் வரவர மக்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெறலாயின. சமூகத்தின் அடிநிலையில் இருந்த, வெகுவாக பாதிக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த - இனங்களின் மக்களுக்கு விழிப்பும் உரிமை உணர்வும் போராட்ட உணர்ச்சியும் தந்தன. பெரியாரும் அவரைப் பின்பற்றியவர்களும் பார்ப்பனிய எதிர்ப்பு பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு, வடவர் 'பனியா ஆதிக்க எதிர்ப்பு. கடவுள் மறுப்பு, மதஒழிப்பு, மூடநம்பிக்கைகள் மற்றும் வறுமை, விபசாரம், பெண்அடிமைத்தனம் ஆகியவற்றின் ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு. தமிழ் மற்றும் தமிழர் இன உணர்வு, சமூக சீர்திருத்தப் பிரசாரம் (சாதி ஒழிப்பு விதவைத் திருமணம், கலப்புத் திருமணம் முதலிய கொள்கைகளை வேகமாகவும் உணர்ச்சிகரமாகவும் மேடைப் பேச்சுக்கள் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் வலியுறுத்தினர். அதற்காகப் பலப்பல பத்திரிகைகள் தோற்றுவிக்கப்பட்டன. 1940களிலும் பின்னரும் இலக்கியம் என்பது அவற்றின் முக்கிய நோக்கமாக இருந்ததில்லை. இலக்கிய நோக்குடன் 'பொன்னி' எனும் மாத இதழ் தோன்றியது. அது பாராட்டத் தகுந்த சாதனைகள் புரிந்தது. அதே சமயம், வேறொரு இலக்கிய நோக்கும் தலை தூக்கியது. உலக அளவில் தோன்றிய இந்த இலக்கியப் போக்கு, இந்திய மொழிகள் அனைத்திலும் கால்பாவியது தமிழ் மொழியிலும் வலுவாக இடம் பெற்று வளரலாயிற்று. அதுதான் முற்போக்கு இலக்கிய நோக்கு இது கம்யூனிஸ்டு இயக்கம் சார்ந்ததாக இருந்தது.