பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 五5 என்னுள் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும் நான் இன்னும் அதிகம் எழுதியிருக்க வேண்டும்; குறைவான பக்கங்களே எழுதப்பட்டிருக்கின்றன என்று வாசகர்கள் கருதக்கூடும் என்றோர் உணர்வு எனக்கு ஏற்படுகிறது. கூடியவரை, இயன்றஅளவு என் மனப்பதிவுகள் இவ்வரலாற்றில் இடம் பெற்றிருக்கின்றன என்றே எண்ணுகிறேன். தமிழில் தன்வரலாற்று நூல்கள் மிகக் குறைவாகவே எழுதப்பட்டிருக்கின்றன. அனுபவமும் ஆற்றலும் மிகுந்தவர்கள் குறிப்பிடத் தகுந்த சுயவரலாறு ஆக்கியிருக்கிறார்கள். அரசியல் தீவிரவாதியாகச் செயலாற்றிக் கீர்த்தி பெற்ற வ.உ. சிதம்பரனார் தன் வரலாற்றைச் செய்யுள் வடிவில் யாத்துள்ளார். அறிஞரும் செயல்வீரருமான திரு.வி. கலியாணசுந்தரனாரும் தன்வரலாற்றைப் படைத்திருக்கிறார். தமிழ் மொழியின் வளத்துக்காக அரும்பெரும் தொண்டாற்றிய தமிழ்த் தாத்தா உவே. சாமிநாதய்யர் மிகச் சிறப்பாகத் தன் வரலாற்றைப் படைத்திருக்கிறார். தன்வரலாற்று நூல்களிலேயே அரியதோர் எடுத்துக்காட்டாக அது விளங்குகிறது. கவிஞர் கண்ணதாசன் கவர்ச்சிகரமாகவும் தனித்தன்மையோடும் தனது வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார். கவிஞர் நாமக்கல் வெ. இராமலிங்கம் எழுதியுள்ள 'என் கதை'யும் விசேஷமானதே. இப்படி இன்னும் ஒரு சில வந்திருக்கலாம். இப்போது நானும் என் தன் வரலாற்றை என் இயல்புப்படி எழுதியிருக்கிறேன். அவ்வளவுதான்! வல்லிக்கண்ணன்