பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 173 திருமணம் நடைபெற்றுக் குடும்பம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், சென்னையில் அதற்கேற்ற வீடு தேடவேண்டிய கட்டாயம் உண்டாயிற்று முதலில், மீர்சாகிப்பேட்டை செக்கடித் தெருவில், ஒரு வீட்டில் ஒரு பகுதி 'போர்ஷன் வாடகைக்கு அமர்த்தப்பட்டது. அது வசதிப்படாததனால், சில மாதங்களிலேயே வேறு இடம் பிடிக்க நேர்ந்தது. ஜெனரல் பேட்டர்ஸ் ரோடை ஒட்டிய, உட்ஸ்ரோடில், அதன் கிளைகளில் ஒன்றாக அமைந்துள்ள ராமசாமி மேஸ்திரி தெருவில், ஒரு வீட்டின் மாடிப் பகுதி அமர்த்தப்பட்டது. அது போதுமான வசதிகளைக் கொண்டிருந்தது. அண்ணா வேலை பார்த்த எபிஷியன்ட் பப்ளிசிட்டீஸ் ஆபீசுக்கு வெகு அருகிலும் இருந்தது கூடுதல் சவுகரியமாயிற்று. ஆகவே, அண்ணா தோட்ட வீட்டை விட்டுப் பிரிந்து குடும்பம் நடத்தலானார். குழந்தைகள் பிறந்தன. நான் தோட்ட வீட்டிலேயே தங்கினேன். சாப்பிடுவதற்காக உட்ஸ்ரோடுக்கு வந்து போவதை வழக்கமாக்கிக் கொண்டேன். எங்கும் நடந்து போய் நடந்து திரும்புவதே எனது பழக்கம். இங்கும் அப்படித் தான். சில வருடங்கள் இது நீடித்தது. பிறகு, இது வெட்டிவேலை, வீண் அலைச்சல், காலநஷ்டம் என்பதனால் இரட்டை வாழ்வை விட்டுவிடத் தீர்மானித்தேன். மேலும், அண்ணாவுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. தினசரிப் பொறுப்புகளும் அலுவல்களும் அதிகரித்தன. அண்ணாவின் சிரமங்களும் கூடின. எனவே, நானும் அங்கேயே அவர்களுடன் தங்கினால் உதவியாக இருக்கும் என்று அண்ணா கருதியதால், நானும் தோட்ட வீட்டை விட்டு விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே, 1965இல் E டெப்போத் தெரு தோட்ட வீடு எண் பத்துக்கும் எனக்கும் இருந்த உறவு அறுபட்டது. பதினைந்து வருடகாலம் அருமையான வசிக்குமிடமாக உதவிய ஆசிரமம் போன்ற சிறுவீடு எனக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு இடமாகிவிட்டது 1973இல் என் அம்மா இறந்து போனாள். அம்மா இறப்பதற்கு முன்னதாக அவள் முதுமைக் காலத்தில் உதவுவதற்காகவும், ஆஸ்துமா நோயினால் அதிகம் கஷ்டப்பட்ட பெரிய அண்ணாச்சிக்குத் துணையாகவும் 1972 முதல் நான் ராஜவல்லிபுரத்திலேயே தங்கினேன். ஒரு காலத்தில் வளமாக இருந்த குடும்பம், காலகட்டத்தில், சிறிது சிறிதாக வறுமை நிலை அதிகம் ஏற்று வந்தது. குடும்பச் செலவுகள், நோய்க்குச் சிகிச்சை என்றெல்லாம் செலவுகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. அதனால், தோட்டம், வயல் ஆகியவற்றை விற்க வேண்டியதாயிற்று. சிறிதளவு வயலும்,