பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f78 வாழ்க்கைச் சுவடுகள் வெகுவாகப் பயன்படுகிறது என்று பேராசிரியர்கள் தவறாது கருத்துத் தெரிவித்தார்கள். ஒரு சில கல்லூரிகளில் தற்காலத் தமிழ் இலக்கியம், புதுக்கவிதை பற்றி மாணவர்கள் முன் எங்களைப் பேசச் செய்தார்கள். ஒரிரு கல்லூரி முதல்வருக்கு எழுத்தாளர்களான எங்களைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. சீசனில் லைபிரரிக்குப் புத்தகங்கள் விற்பனை செய்ய வருகிற புத்தக வியாபாரிகள் இனத்தைச் சேர்ந்தவர்கள் தாம் நாங்களும் என்று அவர்கள் கருதினார்கள். அந்த ரீதியிலேயே பேசி அனுப்பினார்கள். - - எல்லா இடங்களிலும் பேராசிரியர்களுக்கு வியப்புத் தந்த விஷயங்களும் உண்டு. நீங்கள் இரண்டு பேருமே மிக எளிமையாகத் தோன்றுகிறீர்கள். பெரிய எழுத்தாளர்கள் என்ற எவ்வித பந்தாவும் பண்ணாது சாதாரணமாக இருக்கிறீர்கள். உங்கள் புத்தகங்களை எடுத்துக் கொண்டு நீங்களே விற்கக் கிளம்பியிருக்கிறீர்கள் என்று ஆச்சரியப்பட்டார்கள். ஒரு கல்லூரியில் எங்களை நன்கு உபசரித்தார்கள். நீங்கள் தான் உண்மையான காந்தீயவாதிகள். எளிமையாக இருக்கிறீர்கள். தேச விடுதலைப் போராட்ட காலத்தில், தேசத் தொண்டர்கள் அவர்களே நூற்ற நூலில் செய்த கதராடைகளை மூட்டையாகச் சுமந்து கொண்டு, ஊர்ஊராகப் போய் விற்பனை செய்தார்கள். உங்களைப் பார்க்கிற போது அவர்களுடைய நினைவு வருகிறது. நீங்கள், உங்களுடைய புத்தகங்களைச் சுமந்து கொண்டு விற்பனை செய்கிற இலக்கியத் தொண்டர்களாக இருக்கிறீர்கள் என்று மகிழ்ச்சியோடு பேசி எங்களைச் சந்தோஷப்படுத்தினார்கள். கூடவே சொன்னார்கள். நீங்கள் வந்திருக்கிற சமயம் சரியில்லை. இப்போது உங்கள் புத்தகங்களை வாங்கக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. அதற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். நாங்கள் வருத்தப்படவில்லை. அவர்களுடைய உபசரிப்பும் பண்டாடும் இனிய பேச்சும் எங்களுக்குச் சந்தோஷமே தந்தன. இந்த ஊர்சுற்றல் மகிழ்ச்சிகரமான அனுபவமாக அமைந்திருந்தது. ஆயினும், இரண்டு மாதங்களக்குப் பிறகு, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுவதற்கும். பின்னர் திருச்சி மாவட்டத்தில் சற்றுப் பயணம் செய்யவும் சி.சு. செல்லப்பா அழைத்தபோது நான் வரவில்லை என்று மறுத்துவிட்டேன். செல்லப்டா மட்டும் பிடிவாதமாகத் தனது முயற்சியை மேற்கொண்டார். அலைச்சலினால் கால் மூட்டுகளில் வலியும், புத்தகப் பைகளைச் சுமந்து சுமந்து தோள்களில் வலியும் ஏற்படும் வரை அவர் புத்தகங்களை விற்பதற்காகச் சுற்றித் திரிந்தார். உடல் பலவீனங்கள் அதிகரித்து, இனி அலைய முடியாது என்ற நிலை ஏற்படும் வரை அவர் விடாது தமது பணியைச் செய்து கொண்டிருந்தார்.