பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் £89 எழுதுகிறவர்களை வேண்டாதவர்களாக-விரோதிகளாக-மதிக்கத் தொடங்குகிறார்கள். தமிழில் இலக்கிய விமர்சனம் வளராமல் இருப்பதற்கு, எழுத்தாளர்களின் இந்த மனநிலையும் ஒரு காரணமாகும். இதை மணிக்கொடி எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் 1940களிலேயே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 'என்ன எழுதுவது? என்பது கட்டுரையின் பெயர். எழுதும்படி அடிக்கடி மற்றவர்கள் தூண்டுகிறார்கள். ஆனால், எழுதுகிறவருக்கு என்ன எழுதுவது என்ற குழப்பம் அவ்வப் போது தோன்றத்தான் செய்கிறது என்று தொடங்கி, தனக்கு உள்ள நெருக்கடிகள், சிரமங்கள் பற்றிக் கூறிவிட்டு, புதிதாக எழுதவேண்டுமானால் விமர்சனம் எழுதலாம். ஆனால் விமர்சனம் எழுதுவதில் ஓர் ஆபத்தும் இருக்கிறது.விமர்சனத்துக்கு உள்ளாகிறவர்கள் நம்மை எதிரியாகக் கருதிவிடுவார்கள். நண்பர்களைப் பகைவர்களாக்கிக் கொள்ள வேண்டுமானால், விமர்சனம் எழுதலாம். அது எதற்காக என்று எண்ணித் தான் நான் வெறுமனே கதைகளையே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று கு.ப.ரா. கூறியிருக்கிறார். 'மணிக்கொடி எழுத்தாளர்கள் இலக்கிய விமர்சனத்தில் ஆர்வம் கொண்டதில்லை. முதலில் படைப்புகள் தான் முக்கியம் போதுமான அளவு படைப்புகள் தோன்றிய பிறகு விமர்சனத்தில் ஈடுபடலாம் என்று அவர்கள் கருதினார்கள். அதனால் இலக்கியத் தரமான சிறுகதைகள் படைப்பதிலேயே அவர்கள் உற்சாகம் காட்டினார்கள். இருப்பினும், புதுமைப்பித்தன் விமர்சன ரீதியில் அவ்வப்போது கருத்துக்கள் தெரிவித்திருக்கிறார். புத்தகங்கள் பற்றியும் சில எழுத்தாளர்களின் எழுத்துக்கள் குறித்தும் சூடும் சுவையும் நிறைந்த அபிப்பிராயங்களை வெளியிட்டிருக்கிறார். 'கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியின் கதைகள் பற்றிக் காரசாரமான விமர்சனங்கள் எழுதினார். இலக்கிய வளர்ச்சிக்கு விமர்சனம் அவசியம் தேவை என்ற உணர்வோடு 1960களில் க.நா. சுப்ரமண்யம் விமர்சனத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இலக்கிய விமர்சனத்தில் முனைப்பாக இருந்ததனால் அவர் பல எழுத்தாளர்களின் வெறுப்புக்கும் எதிர்ப்புக்கும் ஆளாக நேரிட்டது. அதற்கு அவர் கையாண்ட விமர்சன முறையே காரணம் ஆகும். க.நா.சு தமது சொந்த ரசனையை ஆதாரமாகக் கொண்டு முடிவுகள் தெரிவித்தார். யார் யார் சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் என்று பட்டியலிட்டார். சிறிது காலத்துக்குப் பிறகு முதலில் குறிப்பிட்ட பத்துப் பெயர்களில் இருந்து சில பெயர்களை நீக்கினார். வேறு சிலரைச் சேர்த்தார். அவற்றுக்கான காரணங்களைச் சொல்லவும் இல்லை. நான் உலக இலக்கியங்கள் கற்றவன்;