பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 வாழ்க்கைச் சுவடுகள் மு.வ. முதலில் ஒரு நாவல் எழுதினார். அதை வெளியிடும்படி பாரிநிலையம் செட்டியாரை வேண்டினார். ஆனால் செட்டியார், இதெல்லாம் விற்பனையாகாது என்று சொல்லி, மு.வ. நாவலை வெளியிட மறுத்து விட்டார். மு.வ. அதைத் தாமே பிரசுரித்தார். அந்த நாவலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இரண்டாவது நாவல் எழுதி அதையும் மு.வவே பிரசுரம் செய்தார்.அதைப் பாரி நிலையம் விற்பனை உரிமை பெற்று விற்பனை செய்தது. கல்லூரி மாணவர்களிடையிலும், இதர வாசகர்கள் மத்தியிலும் மு.வ. எழுத்துக்குத் தனி மதிப்பு ஏற்பட்டது. மு.வ. புத்தகங்களின் விற்பனையைக் கவனித்த பரிநிலையம் செட்டியார், மூன்றாவது நாவல் எழுதி வெளியிடும்படி அவரைக் கேட்டுக் கொண்டார். பாரிநிலையம் விற்பனை உரிமை என்று போட்டபடிதான் மு.வ, நாவல்கள் வெளிவந்தன. 'ஆரம்பத்தில் புத்தகங்கள் விற்றபிறகே பாரிநிலையம் மு.வ. க்குப் பணம் கொடுத்தது. நாற்பது சதவிகிதம் அது தனக்கு எடுத்துக் கொண்டது. போகப் போக, மு.வ.வின் எழுத்துக்களுக்கு இருந்த செல்வாக்கையும், வரவேற்பையும் பார்த்த செட்டியார், மு.வ. எழுத்துக்களைத் தாமே பிரசுரிக்க முன்வந்தார். மு.வ. எழுதிக் கொடுத்து விட வேண்டியது எழுத்துப் பிரதியைப் பெற்றதுமே பாரிநிலையம் முன் பணமாக உரிய தொகையை மு.வ.வுக்குத் தந்துவிடும். விற்பனை உரிமை, பாரிநிலையம் என்று தான் மு.வ. புத்தகங்கள் அச்சிடப்பட்டு வந்தன. அப்படி ஒரு நிலைமையை எழுத்தாளரின் எழுத்துக்கள் ஏற்படுத்துமானால், புத்தக வெளியீட்டாளர்கள் தாங்களே விரும்பி அவற்றைப் பிரசுரிப்பார்கள் என்று கண. முத்தையா கூறினார். இது எல்லா எழுத்தாளர்களுக்கும் சாத்தியமாகக் கூடியதா என்ன? தமிழ்நாட்டில், எழுத்தாளர்கள் எவ்வளவு திறமையாளர்களாக இருந்தாலும், அவர்களுடைய எழுத்துக்கள் எவ்வளவு தரமும் கனமும் புதுமையும் உடையனவாக இருந்தாலும், எளிதில் தொழில்முறைப் பதிப்பகத்தாரின் தயவையும் உதவியையும் பெற்று, புத்தகங்களாக வெளி வந்துவிட முடியாது. இந்த நிலைதான் காலங்காலமாக நீடித்து வளர்கிறது. எழுத்தாளர் நீல. பத்மநாபன், அவருடைய ஒவ்வொரு நாவலையும் ரெகுலர் பப்ளிஷர் மூலம் புத்தகமாக்க முயன்று வருடக் கணக்கில் காத்திருந்து ஏமாற்றம் அடைந்ததையும், பின்னர் அவரே பணம் செலவுபண்ணித் தமது நாவல்களைத் தானே புத்தகங்களாக வெளியிட்டுச் சிரமங்கள் ஏற்றதையும் பல இடங்களில் எழுதியிருக்கிறார். பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார். இறுதியில், தேரோடும் வீதி என்ற இரண்டு பாக நாவலில் விரிவாகவே பதிவு செய்திருக்கிறார். திறமை. ஊக்கம், உழைப்பு, உற்சாகம், தன்னம்பிக்கை எல்லாம் பெற்றிருந்த போதிலும் ஓர் எழுத்தாளன் தனது எழுத்துக்களை வெளிக்கொண்டு வரவும் உரிய கவனிப்பைப் பெறவும் எவ்வளவு சிரமங்களை மேற்கொள்ளவும் போராட்டங்களை எதிர் கொள்ளவும் வேண்டியிருக்கிறது.