பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 19 இவை எல்லாம் நானும் கதைசொல்லி ஆக வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் வளர்த்தன. பள்ளிப் படிப்போடு, நூல் நிலையப் புத்தகங்களை எடுத்துப் படிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தேன். ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் அதிகம் கிடைத்தன. உயர்நிலை வகுப்புகளுக்கு வந்தபோது படிப்பதற்கு அக்காலத்தியப் பத்திரிகைகள் கிடைத்தன. அன்று இன்று இருப்பது போல் மிக அதிகமான சஞ்சிகைகள் இருந்ததில்லை. அவை குறித்து உரிய இடத்தில் கவனிக்கலாம். இவற்றால் எல்லாம். நானும் கதைகள் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எழுதி எழுதிப் பழகலானேன். நான் எழுத்தாளன் ஆக வேண்டும் என்று விரும்பி, முயற்சிகள் மேற் கொண்டதற்கு என்ன காரணம்? எங்கள் குடும்பத்தில் என் முன்னோர்களில் யாராவது எழுத்துத் துறையில் ஈடுபட்டிருந்தார்களா? இப்படிப் பிற்காலத்தில் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டது உண்டு. அப்படி யாரும் இருந்ததில்லை. அதற்கான சூழ்நிலையும் அப்போது இருக்கவில்லை. 2 1920 நவம்பர் 2 - நான் பிறந்த தேதியாகும் எனது ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இராஜவல்விபுரம் கிராமம் திருநெல்வேலி நகரிலிருந்து கிழக்கே ஆறு மைன் தள்ளி அமைந்துள்ளது தாழையூத்து அதற்கான ரயில் நிலையம் ராஜவல்லிபுரம் ஒரு காலத்தில் வெகு அழகான ஊராகத்தான் திகழ்ந்தது. ஊருக்குள் போகிற வழி ஓரத்தில் பெரிய குளம். அதன் கரையாக அமைந்த சாலையில் அடர்ந்து ஓங்கி வளர்ந்த ஆலமரங்கள் குளுகுளு நிழல் பரப்பி நின்றன. 1950கள் வரை. காலப்போக்கில் அம்மரங்கள் வெட்டப்பட்டு, வெறிச்சிட்டுக் கிடக்கும் ரஸ்தா மட்டும் இருக்கிறது. தாழையூத்து ஊர் பெரும் வளர்ச்சி பெற்றுவிட்டது. இந்தியா சிமிண்ட்' ஆலை தோன்றி, பெரிய அளவில் வளர்ந்து காடாகக் கிடந்த சூழ்நிலையையும் ஊரையும் முற்றிலும் மாற்றி விட்டது. இப்போது அது சங்கர்நகர் டவுன் ஷிப், பல நெசவு மில்களும் அங்கு இடம் பெற்றுள்ளன. பரபரப்பான கடைவீதி வந்துவிட்டது. பஸ்கள் போக்குவரத்து அதிகம். மேல்நிலைப் பள்ளி, 'பாலிடெக்னிக் எல்லாம் தோன்றி வளர்ச்சி பெற்றுவிட்டன. இராஜவல்லிபுரம் அவ்விதம் மாறுதல் எதுவும் பெறவில்லை. 'அன்று கண்ட மேனி அழியாமல் அப்படியே இருக்கிறது' என்பார்களே,