பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 229 நூற்றைம்பது வருடங்களுக்கும் மேலாகவே பதிப்புத் துறையில் ஈடுபட்டிருக்கும் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் - கிறிஸ்டியன் லிட்டரேச்சர் சொஸைட்டி (CLS) கிறிஸ்தவ இலக்கியங்களையும் கிறிஸ்தவ எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் புத்தகங்களாக வெளியிடுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருப்பினும் பொதுவான தமிழ் இலக்கிய நூல்களையும் வெளியிட்டு வந்திருக்கிறது. இப்போதும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. உலக இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பிரசுரம் செய்துள்ளது. பெருங்குளம் அ. மாதவய்யாவின் ஆங்கில நாவல்களையும் அவற்றின் தமிழாக்கங்களையும் பிரசுரம் செய்திருக்கிறது. கிறிஸ்தவரல்லாத எழுத்தாளர்களின் படைப்புகளையும் விரும்பி ஏற்று வெளியிட்டுள்ளது. இதற்கெல்லாம் அந்நிறுவனத்தின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுச் செயல்புரிகிற அறிஞர்களின் பரந்த நோக்கும் தாராள மனப்பண்புமே அடிப்படைக்காரணங்களாகும். தற்போது சி.எல்.எஸ்.சின் பொதுச்செயலாளராகக் கடமையாற்றும் டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ் ஆழ்ந்த அன்பும் மனிதநேயமும் விசாலநோக்கும் முற்போக்குச் சிந்தனைகளும் பலருக்கும் உதவக் கூடிய மனநிலையும் திறமையாளர்களை மதிக்கும் உயர்பண்பும் மதநல்லிணக்க உணர்வும் கொண்டவராவார். அவருடைய பரந்த உள்ளம், ஒரு முஸ்லீம் எழுத்தாளரின் சிறுகதைகளை ஏற்று கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் வெளியீடாகக் கொண்டுவர இடமளித்திருக்கிறது. திறமையான சிறுகதை எழுத்தாளரான களந்தை பீர்முகம்மதுவின் படைப்புகளை டாக்டர் தயா ஏற்று நல்லதொரு தொகுப்பாகப் பிரசுரித்திருக்கிறார். அசோகமித்திரன் நாவல்கள், சிட்டி பெ. கோ. சுந்தர ராஜனும் சிவபாத சுந்தரமும் இணைந்து எழுதிய தமிழ் நாவல் நூறாண்டு வளர்ச்சியும் வரலாறும் மற்றும் தமிழ்ச்சிறுகதைகளின் வரலாற்று ஆய்வு, சு.சமுத்திரம் படைப்புகள், புலவர் கோவேந்தன் எழுத்துக்கள், வ.க. சிறுகதைகள், குறுநாவல்கள். தி.கசியின் திறனாய்வுக் கட்டுரைகள், விந்தன் கட்டுரைகள் என்று வெளியிட்டு, கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் பரந்த மனத்துடன் தமிழுக்குப் புரிந்துள்ள இலக்கியப் பணி பெரிதாகும். அனைத்தினும் மேலாகப் போற்றத் தகுந்த விதத்தில் மற்றொரு நற்பணியையும் சி.எல்.எஸ். செய்து கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் மூன்று நாள் கருத்தரங்கு நடத்தி, தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆய்வு செய்து, விமர்சனக் கலையை வளர்த்து வருகிறது அது முப்பது வருடங்களாக இப் பணியை அது தொடர்ந்து செய்கிறது. முப்பது வருடங்களுக்கு முன்பு, கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த திரு. ராசதுரை நண்பர் வட்டம் கருத்தரங்கைத் துவக்கிவைத்தார். ஒரிரு வருடங்களில் அவர் மறைந்து விடவும் அவரைத்