பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 233 சாதனைகளையும் புரிந்து கொள்ளவும் வருங்கால ஆய்வாளர்களுக்கு நற்றுணையாகவும் இத்தொகுப்புகள் நன்கு உதவும். இக் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது ஒரு நற்பேறு ஆகும் என்றும் நினைவில் நிற்கும் இனிமையான அனுபவமும் கூட. ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் மா.ரா.அரசுவின் செயலூக்கமும் உற்சாகமான ஈடுபாடும் சோம்பலின்றி அலைந்துதிரிந்து ஏற்பாடுகளைக் கவனிக்கிற இயல்பும் கருத்தரங்கங்களின் வெற்றிக்கு ஆதாரமாக அமைகின்றன என்று கூறலாம். ஆரவாரமான விளம்பரங்கள் எதுவுமின்றி அமைதியான தன்மையில் உயரிய பயனுள்ள பணிகள் இவ்வாறு நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நெய்வேலியில் செயலாற்றிக் கொண்டிருக்கும் வேர்கள் இலக்கிய இயக்கம்' என்பதையும் மற்றொரு சான்றாகக் குறிப்பிடலாம். பல்சுவை இலக்கிய இதழ்கள் என்றும் ஜனரஞ்சகப் பத்திரிகைகள் என்றும் கூறிக் கொண்டு, வசீகரமான அட்டை அமைப்புகளோடும் கவர்ச்சிப் படங்களுடனும் கிசுகிசுச் செய்திகள் கிளுகிளுப்பூட்டும் கதைகள் முதலியவற்றோடும் படையெடுத்து மக்களின் ரசனையையும் சமுதாயத்தின் கலாச்சாரங்களையும் நாட்டின் பண்பாட்டையும் சிதைத்துச் சீரழித்துக் கொண்டிருக்கின்றன. வணிகநோக்குப் பத்திரிகைகள். பணபலமும் அசுரவேகத்தில் உற்பத்தி செய்து குவிக்கிற இயந்திரங்களின் பலமும் கொண்டு பூதாகரமாக வளர்ந்து விட்ட இந்த ரக நச்சுச் சக்திகளை எதிர்த்துப் போராடி முறியடிக்க இயலாது நல்ல மனமும் நல்ல நோக்கங்களும் உடையவர்களால். இருப்பினும் நம்மால் இயன்ற அளவு எதிர்ப்பைக் காட்ட வேண்டும். அத்துடன் நல் இலக்கியங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். இத்தீய சக்திகளுக்கு எதிராகப் போராடத் துணிகின்ற சிறுபத்திரிகைகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். ஒத்த மனமுடைய இலக்கிய ரசிகர்களை ஒருங்குசேர்க்க வேண்டும். அதற்காக அவ்வப்போது புத்தகக் காட்சிகள், சொற்பொழிவு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யவேண்டும். இந்தவிதமான சீரிய நோக்கங்களோடும் இலட்சியத் துடிப்போடும் நெய்வேலியில் வேர்கள் இலக்கிய இயக்கம் தொடங்கப்பட்டது. இலக்கிய ஈடுபாடும் தேர்ந்த ரசனையும் கொண்டுள்ள இளைஞர் மு. இராமலிங்கம் செயலாளராக இருந்து இவ் அமைப்பைக் கட்டிக் காத்து வளர்த்து வருகிறார். தரமான இலக்கியச் சிற்றிதழ்களை விற்பனை செய்யத் துணைபுரிவதுடன், தகுதி வாய்ந்த சிற்றிதழ்களுக்குப் பொருளுதவியும் செய்திருக்கிறது வேர்கள் இயக்கம். நல்ல புத்தகங்களை விற்றுக் கொடுப்பதுடன்