பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 வாழ்க்கைச் சுவடுகள் வாழ்ந்தவர்கள் அந்த வட்டாரத்தில் அதிகம் இருந்தார்கள். கொழும்புக்குப் போய் பணம் பண்ணாமல் திரும்பி வந்து, சுவையான கதைகள் பேசிப் பெயர் - பெற்ற அண்ணாச்சிகளும் அநேகர் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் கதிர்காமம் கோயில் பற்றிக் கதைகதையாகப் பேசுவார்கள். அங்கு நடக்கிற பூசை பற்றியும், திரைக்குப் பின்னால் என்ன இருக்கிறது. என்ன நடக்கிறது என்று கண்டு கொள்ள முடியாத மர்மம் குறித்தும் கோயிலின் மேல் கூரை வேய்வது சம்பந்தமான சம்பிரதாயங்கள் பற்றியும் அவர்கள் சொல்வது வழக்கம். சில ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் கதிர்காமம் கோயிலின் மேல்கூரையைப் பழுதுபார்ப்பார்கள். மேலே ஏறிக் கூரை மாற்றுகிற ஆள் கோயிலின் உள்ளே இருக்கிற ரகசியத்தைத் தெரிந்து கொள்ளமுடியும் அவர் கீழே வந்து மற்றவர்களிடம் அதைச் சொல்லிவிடக் கூடுமே அதனால் அந்த ஆள் வேலை முடித்துக் கீழே இறங்கி வந்ததுமே மயங்கி விழுந்து இறந்து போவார். அப்படி ஒரு சக்தி அந்தக் கோயிலுக்கு உண்டு. அதனால் வயது முதிர்ந்த நபர்களே இந்த வேலையில் ஈடுபடுவார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். இது பற்றிய ஓரிரு கட்டுரைகளையும் நான் படித்திருக்கிறேன். இவ்வாறு பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த சூழ்நிலையான கதிர்காமம் அவசியம் பார்க்கப்பட வேண்டிய இடம் என்பது பலரது எண்ணம். இலங்கையில் அனுராதபுரம், சிகிரியா எல்லாம் பார்க்க வேண்டும் என்றும் சொல்வார்கள். என்னை இலங்கை வரும்படி விரும்பிக் கூப்பிட்ட அழைப்புகள் அவ்வப்போது வந்தன. முதன்முதலாக வந்த அழைப்பு, இலங்கை எழுத்தாளரான இலங்கையர்கோன் இறந்த பின்னர், அவர் மனைவியும் நண்பர்களும் அவருடைய சிறுகதைகளைக் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டபோதுதான். இலங்கையர்கோன் என்னோடும் கிராம ஊழியன் இதழோடும் அதிகமான எழுத்துத்தொடர்பு கொண்டிருந்தார். அந்நாட்களில்-1930கள் 40களில் பெயர் பெற்றிருந்த தமிழ்நாட்டுக்கு ஓரளவு தெரியவந்திருந்த முக்கியமான எழுத்தாளர்கள் மூன்று பேர்-சம்பந்தன், சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் இவர்களுடைய கதைகள் அவ்வப்போது கலைமகள் இதழில் பிரசுரம் பெற்றுவந்தன. கிராம ஊழியன் மறுமலர்ச்சி இலக்கிய இதழில் நான் பொறுப்பேற்றுப் பணியாற்றத் தொடங்கியதும், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் வரவேற்று வெளியிடுவதில் கவனம் செலுத்தினேன். இளையதலைமுறை எழுத்தாளர்கள் மகாகவி, வரதர், நாவற்குழியூர் நடராசா, சோ. தியாகராசா, சு. வேலுப்பிள்ளை முதலியவர்கள் கிராம ஊழியனில்