பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 வாழ்க்கைச் சுவடுகள் பப்ளிசிட்டி தந்தன. பிரேம்ஜி எங்களை அமைச்சகத்துக்கு அழைத்துச்சென்று சில அமைச்சர்களோடு அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சிகள் அனைத்திலும் இளைஞர்கள் இலக்கிய ஆர்வமும் இலக்கிய அறிவும் ஈடுபாடும் அதிகம் பெற்றிருப்பவர்களாய்க் காணப்பட்டார்கள். ஆழ்ந்த கேள்விகள் கேட்டு, பயனுள்ள பதில்கள் பெற்றார்கள். கண்டி, மாத்தளை, அட்டன் ஆகியவை மலையகப் பகுதியைச் சேர்ந்தவை. மலையக மக்களின் வாழ்க்கை தேயிலைத் தோட்டங்களைச் சார்ந்து இயங்குவது. தோட்டங்களில் பாடுபடுகிறவர்கள் என்றும் வறுமை நிலையிலேயே இருக்கிறார்கள். இவர்களது குடியுரிமை பறிக்கப்பட்டு, எண்ணற்றோர் வீடற்றவர்கள் ஆனார்கள். இம் மக்களின் வாழ்க்கைத் துயரங்கள், உரிமைப் போராட்டங்கள் குறித்து மிகப்பல கவிதைகளும் சிறுகதைகளும், அநேக நாவல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. இப்பவும் எழுதப்படுகின்றன. அவை மலையக இலக்கியம் என்று சிறப்புப் பெற்றுள்ளன. மலையக இலக்கியம், கலை, கலாச்சாரம், மலையக எழுத்தாளர்களை எல்லாம் கவுரவிக்கும் விதத்தில் கண்டியில் ஒரு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மலையக இலக்கியத்தையும் கலைகளையும் வெளித்தெரியச் செய்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அந்தனி ஜீவா இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். 'கொழுந்து என்றொரு இதழையும் இவர் நடத்துகிறார். மாத்தளையில் மகளிர் பள்ளி ஒன்றில் சிறப்பு நிகழ்ச்சியின்போது, சிற்றிதழ்கள் பற்றி நானும், நாவல்கள் குறித்துப் பொன்னீலனும் பேசினோம். அட்டனில் நந்தலாலா இலக்கிய வட்டம் கூட்டிய கருத்தரங்கில், இன்றைய இலக்கிய இசங்களும் முற்போக்கு இலக்கியத்தில் அவற்றின் தாக்கமும் பற்றி நானும், தமிழ் நாவல்கள் பற்றிப் பொன்னீலனும் சொற்பொழிவாற்றினோம். இலக்கிய ரசிகர்கள் அக்கறையோடு கேள்விகள் கேட்டார்கள். உரிய விளக்கங்கள் அளித்தோம். எங்களுக்கு உற்சாகம் அளித்த நல்ல நிகழ்ச்சிகள் இவை. திருகோணமலையில் நடந்த பிரதேச தமிழ் இலக்கிய விழாவில், கலை நிகழ்ச்சிகள், நாடகம், இசை இவற்றோடு இலக்கியச் சொற்பொழிவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாங்களும் பேச நேர்ந்தது. அங்குள்ளவர்களின் இலக்கிய உணர்வும் அக்கறையும் எங்களுக்கு உற்சாகம் தந்தன. நாங்கள் கொழும்பு நகரில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தோம். கொழும்பு தவிர்ந்த இதர இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்காக நாங்கள் அதிகாலையிலேயே எழுந்து காரில் பயணம் செய்து உரிய நகரத்தை