பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 257 பெற்றுக் கோரிக்கை விடுத்து அனுமதி பெற்றது போதாதா ஒவ்வொரு மூன்று வருடகால நிறைவுக்குப் பின்னும் திரும்பவும் தாசில்தார் கையெழுத்துப் பெற்று, மனுச் செய்ய வேண்டும் என்பது வீண் தொல்லை. அநாவசியமான வேலை என்று எனக்குப்பட்டது. மறுபடியும் நான் மனுச் செய்யவுமில்லை; அரசு உதவிப் பணம் பெற வேண்டும் என்று முயலவுமில்லை. என் அண்ணா இறந்தபோது, குடும்பத்தின் பொருளாதாரம் மோசமான நிலையில் இல்லை. மேலும், மூன்று பெண்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் சம்பளம் அதிகம் இல்லை என்றாலும், திட்டமான மாத வருவாய் போதுமானதாக இருந்தது. இரண்டு பையன்கள் மேல்படிப்புப் படிக்க வேண்டிய நிலை. பெரியவன் முதலில் காலேஜில் சேர்ந்தாக வேண்டும். அவன் அனைத்துப் பாடங்களிலும் உயர் மதிப்பெண்கள் பெற்றிருந்தான். அதனாலேயே கல்லூரிகளில் இடம் கிடைப்பது சிரமமாக இருந்தது. உயர் சதவிகித மதிப்பெண்கள் பெற்றவர்கள் என்ஜினிரிங் படிப்புக்கு முயற்சி செய்வார்கள். அது கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்தில் பி.எஸ்.சி. பி.ஏ. போன்ற வகுப்பு எதிலாவது சேர்ந்து படிக்க முற்படுவார்கள். என்ஜினிங் கல்லூரியில் இடம் கிடைத்த உடனே இக்கல்லூரிப் படிப்பை விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். இதனால் பல சிக்கல்களும் சிரமங்களும் ஏற்படுகின்றன என்று கல்லூரி நிர்வாகம் கருதுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக உயர்ந்தபட்ச மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைத் தங்கள் கல்லூரியில் சேர்க்காமல் தட்டிக் கழிப்பதிலேயே கல்லூரி முதல்வர் கருத்தாக இருக்கிறார். பலத்த சிபாரிசு இருந்தால் எதுவும் எளிதில் காரியசித்தி ஆகிவிடும். அப்படி சிபாரிசுகள் எதுவும் இல்லாததனால் சுப்பிரமணியன் விவேகானந்தா கல்லூரி லயோலா கல்லூரி என்று கல்லூரி கல்லூரியாக ஏறி இறங்கி, காத்து நின்று பல வாரங்கள் அலைந்து சிரமப்பட்டான். அநேக தடவைகள் நானும் அவனோடு போய்வர வேண்டியதாயிற்று. அச் சமயங்களில், கல்லூரிதோறும் காத்து நின்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் காணநேர்ந்தது. அது மனக்கஷ்டம் உண்டாக்கும் கசப்பான அனுபவமாகவே இருந்தது. இறுதியில், ஒரு மாத கால அலைச்சலுக்கும் இடைவிடாத முயற்சிக்கும் பிறகு, சுப்பிரமணியனுக்கு விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்.சி. வகுப்பில் இடம் கிடைத்தது. சில வருடங்களுக்குப் பிறகு, இரண்டாவது பையன் கணேசனும் கல்லூரியில் இடம் பெறுவதற்கு அதே சிரமங்களை அனுபவிக்க வேண்டியதாயிற்று.