பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 25 வைக்கப்பட்டிருந்தது. ஆனால் என்னைப் பள்ளிக் கூடத்தில் சேர்த்தபோது என் அப்பா என் பெயரைக் கிருஷ்ணசுவாமி என்று பதிவு செய்தார். சைவ சமயத்தில் தீவிரமான பற்றுடைய கார்காத்த குலத்தைச் சேர்ந்தவர்கள் வைஷ்ணவப் பெயரை வைத்துக் கொள்வதில் ஏன் மோகம் கொண்டார்கள் என்று சில பேர் கேட்பது உண்டு. அதற்கு அடிப்படையாக சுவாரசியமான வரலாறு ஒன்று இருக்கிறது. சுமார் இருநூறு-இருநூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் கார்காத்த வேளாளரில் சில குடும்பத்தினர் வடக்கே பந்தல்குடி என்ற ஊரிலிருந்து புறப்பட்டுத் தெற்கு நோக்கி வந்தார்கள். வழியில் ஒரு ஆற்றின் கரை மீது தோப்பில் தங்கினார்கள். காலை நேரம், எழு ஞாயிற்றின் பொன்கதிர்கள் பட்ட மாமரம் ஒன்றின் கிளையில் பளபள என்று ஒரு ஒளி தென்பட்டது. ஒருவர் கவனித்து நோக்கியதில் குரங்கு ஒன்று ஒரு செம்பை வைத்திருப்பது தெரிந்தது. அது தங்கம் போல் மிளிர்ந்தது. அவர் சிறு சிறு கற்களை எடுத்து, குரங்கின் மீது வீசினார். குரங்கு மிரட்சி அடைந்து செம்பைக் கீழே விட்டெறிந்து விட்டு அடர்ந்த கிளைகளுக்குள் பதுங்கியது. அவர் செம்பை எடுத்துப் பார்த்தார். பொன்முலாம் பூசப்பெற்ற அழகிய சிறு பாத்திரம். அதில் நேர்த்தியாகத் தெய்வ உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அது கோபால கிருஷ்ணன் திருஉருவம் என்று கண்டுகொண்டார் செம்பைக் கைப் பற்றியவர். அது புனிதமானது என்று அவர் மனசுக்குப்பட்டது. அதைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் ஏற்பட்டது. அன்று இரவு உறங்கிய போது அவருக்கு ஒரு கனவு வந்தது. தவக்கோலம் பூண்ட ஒரு முனிவர் கனவில் தோன்றினார். 'உனக்குக் கிடைத்திருப்பது சும்மா பால் கறக்க உபயோகப்படுகிற சாதாரணச் செம்பு இல்லை. கோபாலகிருஷ்ணன் 'விக்ரகம் மாதிரி அது பூஜையில் வைத்து அதை நான் தினம் வழிபட்டு வந்தேன். நான் நீராடச் சென்றிருந்த போது குரங்கு வந்து அதை எடுத்துச் சென்றுவிட்டது. உன் புண்ணியத்தின் நற்பலனாக அது உன் கைக்கு வந்திருக்கிறது. நாள்தோறும் பக்தியோடு அதை வழிபட்டு வா. உனக்கு நல்லதே நிகழும். உன் குலம் தழைத்துச் செழிக்கும்' என்று கூறி ஆசி வழங்கிவிட்டு அவர் மறைந்தார். அது சொப்பனமாகத் தோன்றவில்லை செம்பை வைத்திருந்தவருக்கு முனிவரே நேரில் நின்று அருளுரை புகன்றது போல்தான் இருந்தது அவருக்கு. உளப்பூர்வமாக அவர் நம்பினார். அப்போதிருந்தே பக்தியுடன் செம்பைக் கும்பிட்டுப் பூஜை பண்ணலானார். தெற்கே வந்தவர்களில் ஒரு குழுவினர் ராஜவல்லிபுரத்தில் வசிக்க முடிவு செய்தார்கள். அவர்களுக்குக் கோபாலகிருஷ்ணன் குலதெய்வம்