பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 233 அதனால் அங்குப் போய் நீண்ட நாட்கள் தங்குவது எனக்குப் பிடிக்காத விஷயம் ஆகிவிட்டது. முத்தம்மாள் அந்த வீட்டிலேயே தங்குவதுமில்லை. அடிக்கடி மகள் வீட்டுக்குப் போய்விடுவாள். அல்லது அங்கே கல்யாணம், இங்கே கோயில் கொடை என்று சொல்லி எங்காவது ஊர்வழி போய் இரண்டு மூன்று நாட்கள் தங்கிவிடுவாள். அதனால் வீடு கவனிப்பற்றுக் கிடக்கலாயிற்று ஒரு சமயம் இரண்டு வருடங்கள் நான் அங்கே போய்த் தங்கவில்லை. பிறகு போனபோது அதிர்ச்சியும் மனவேதனையும் தரும் நிகழ்ச்சி நடந்திருந்தது. பெரிய அறையின் பெரிய சுவர் அலமாரியில் மதிப்பு மிக்க புத்தகங்கள், எழுத்துப் பிரதிகள் முதலியவற்றைப் பாதுகாப்பாக வைத்திருந்தேன். இன்னோர் அறையில், மூடிகள் இல்லாத இரும்பு அலமாரியில் பலவிதமான நூல்கள், சிற்றிதழ்கள், கையெழுத்துப் பத்திரிகைகள், நோட்டுகள் முதலியன அடுக்கியிருந்தேன். ஆள்நடமாட்டம் இல்லாத இருண்டவிடாக அதுமாறியிருந்ததால், பகலில் கூடத் தடித்தடி எலிகள் சுதந்திரமாக உலாவின. திறந்த அலமாரியில் காகிதக் கட்டுகளுக்கிடையே குடியிருந்தன. புத்தகங்கள் பத்திரிகைகள் எழுத்து நோட்டுகளைக் கண்டபடி கடித்துக் குதறி நாசப்படுத்தியிருந்தன. எலி மூத்திரமும் புழுக்கைகளும் சேர்ந்திருந்த நாற்றம் சகிக்க முடியாததாக இருந்தது. பெரிய அறையின் சுவர் அலமாரியைத் திறந்து பார்க்கையில் மிகுந்த துயர வேதனை உண்டாயிற்று. ஐம்பது வருட காலமாகச் சேகரித்து சேமித்திருந்த அரிய நூல்கள் எல்லாம் கறையானால் முற்றிலும் அழிக்கப்பட்டிருந்தன. தற்காலத்தில் கிடைக்க முடியாத இலக்கியச் செல்வங்கள் அவற்றுடன், நான் எழுதிய புத்தகங்களின் பிரதிகளும் அலமாரியில் இருந்தன. அவை அனைத்தும் கறையானுக்கு இரையாகிப் போயிருந்தன. ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. துயரத்தால் நெஞ்சு கனத்தது. வருத்தப்பட்டு என்ன பயன்? போனவை போனவை தானே! அந்த வீடும், வயல்கள் தோட்டம் முதலியனவும் பாகம் செய்யப்படாத பொதுச் சொத்தாகவே இருந்தன. பெரிய அண்ணாச்சி வாழ்ந்த காலத்திலேயே, வயல்களை ஒவ்வொன்றாக விற்க வேண்டிதாயிற்று தோட்டமும் விலை போயிற்று. எஞ்சியிருந்த சிறிதளவு நிலத்தையும், அண்ணாச்சி இறந்த சில வருடங்களில் விற்பனை செய்து வந்த பணத்தை மூன்று பங்குகளாகப் பிரித்துக் கொண்டோம். அண்ணா கோமதி நாயகம், நான், பெரிய அண்ணாச்சி மகள் சண்முக வடிவு ஆகிய மூவருக்கும் சமபங்கு.