பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 認75 எழுத்தாளர்கள் குழுக்குழுவாக இயங்குகிறார்கள். தன்னம்பிக்கையைவிடத் தன்னகங்காரம் மிகக் கொண்டவர்கள் காணப்படுகிறார்கள். தம்மைத் தவிர, பிறர் எவரையும் பாராட்ட மனமில்லாத 'குருபீடங்களாக இருக்கிறார்கள். சாதிக் கண்ணோட்டத்துடன் எழுத்துக்களையும் எழுத்தாளர்களையும் மதிப்பிட்டு, விமர்சனம் என்ற பெயரில் வசை பாடுவதில் இன்புறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாதிவேற்றுமை உணர்வைப் போக்கவும் ஒற்றுமை உணர்வையும் மனிதநேயத்தையும் வளர்க்கவும் துணைபுரியவேண்டிய நல்லிலக்கியங்களைப் படைக்க வேண்டிய கவிஞர்களும் படைப்பு இலக்கியவாதிகளுமே சாதிகளின் பெயரைச் சொல்லி வெறுப்பையும் விரோதத்தையும் வளர்த்துவருவதும் தமிழ்நாட்டின் குறைபாடுகளில் ஒன்றாக உள்ளது. எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களுக்குச் சமூகத்தில் ஒரு செல்வாக்கோ (அந்தஸ்து), கவுரவமோ, அங்கீகாரமோ கிடைப்பதில்லை. சினிமாக்கலைஞர்கள், அரசியல்வாதிகள் பெறுகிற கவனிப்பையும் பெருமையையும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் பெறவதில்லை. இருப்பினும் எழுத்துக்கு ஒரு தனி வசீகரம்-கவர்ச்சி இருக்கிறது. படித்த-படிக்காத இளைஞர் அநேகர் எழுத்தாளராக ஆசைப்படுகிறார்கள். எடுத்த எடுப்பிலேயே கவிஞர் ஆகிவிடுவதில் முனைப்பாக இருக்கிறார்கள். எளிதில் பெயர் பெற்றுவிட முடியும் என்று எண்ணி ஏமாறுகிறார்கள். ஒரு சமயம் நண்பர் நா. பார்த்தசாரதி பேச்சோடு பேச்சாக இதையும் சொன்னார். 'எனக்கு அகிலனுக்கு மற்றும் எங்களைப் போல் ஜனரஞ்சக வாரப் பத்திரிகைகளில் எழுதிப் பெயர் பெறுகிற ஒரு சிலருக்குக் கிடைத்திருக்கிற பெயரையும் புகழையும் கண்டு, சில இளைஞர்கள் நாமும் எழுதினால் இவர்களைப் போல் புகழும் பெரும் கவனிப்பும் பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். நல்ல மாத வருமானம் தரக்கூடிய உத்தியோகத்தில் இருக்கிற சிலபேர் இந்த நினைப்பினால், தாங்கள் பார்க்கிற வேலையை விட்டுவிட்டு எழுத்தாளனாகிறேன் என்று வந்துவிடுகிறார்கள். எதையாவது எழுதி எடுத்துக் கொண்டு பத்திரிகை அலுவலகங்களுக்கு அலைகிறார்கள். என்னையும் அகிலனையும் சந்தித்து நாங்கள் அவர்களது முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும் என்று கோருகிறார்கள் எதிர்பார்க்கிறார்கள். எழுத்தாளனாக வளர்ந்து முன்னேறுவது எவ்வளவு சிரமமானது. அதற்கு நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம்: எங்களை நாங்களே எவ்வாறு தகுதிப்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை எல்லாம் அவர்கள் புரிந்துகொள்வதேயில்லை. கூட்டங்களில் எங்களுக்கு அளிக்கப்படுகிற வரவேற்பும் பூமாலைகளும்தான் அவர்கள் பார்வையில்படுகிறது. பரிதாபத்துக்கு உரியவர்கள்'