பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 27 1930களில் விறுவிறுப்பும், வேகமும் நிறைந்த எழுத்துக்களைக் கொண்ட பத்திரிகைகள் தோன்றலாயின. அவை குறைந்த விலையில் விற்கப்பட்டன. இந்திய விடுதலைப் போர் முக்கியமான ஒரு கட்டத்தை அடைந்திருந்த காலம் அது. நாட்டு மக்களுக்குத் தேசபக்தி ஊட்டவும், சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை எடுத்துச் சொல்லவும், தலைவர்களின் வீரப் பேச்சுகளை எங்கும் பரப்பவும் இந்தியா நெடுகிலும் பல்வேறு மொழிகளிலும் பத்திரிகைகள் தோன்றி வளர்ந்தன. தமிழிலும் சுதந்திரச் சங்கு', 'காந்தி, மணிக்கொடி', ஜெயபாரதி' என்று பல பத்திரிகைகள் வரலாயின. அவை காலணா, அரை அனா விலையில் விற்கப்பட்டன. "சுதந்திரச் சங்கு உணர்ச்சி செறிந்த வேகமான நடையில் விஷயங்களை எடுத்துக் கூறியது. மாணவர்கள் பலர் சங்குவை வாங்கிப் படிப்பதில் மகிழ்ச்சி அடைந்தார்கள். என் சகோதரர்களும் அவ் இதழை வாங்கினார்கள். சங்கு சுப்பிரமணியன் இதழாசிரியர். டி.எஸ். சொக்கலிங்கம் 'காந்தி இதழை நடத்தினார். இரண்டையும் நாங்கள் விரும்பிப் படித்தோம். ஜெயபாரதி'யைச் சில சமயம் வாங்குவது உண்டு. மணிக்கொடி வார இதழை அந்நாட்களில் நான் அறிந்ததில்லை. அதன் தனிச் சிறப்பைப் பிற்காலத்தில்தான் நான் தெரிந்து கொள்ள முடிந்தது. நாங்கள் வீட்டிலிருந்து பள்ளிக் கூடத்துக்கு ஒரு மைலுக்கும் அதிகமான துரம் நடந்து போய் வந்து கொண்டிருந்தோம். காலையில் 9 மணிக்கு புறப்பட்டுப் போவோம். மத்தியானம் உணவுக்கு வீட்டுக்கு வந்துவிட்டு, 1-30 மணிக்கு மீண்டும் செல்வோம். பிறகு மாலை வேளையில் பள்ளி முடிந்து திரும்பி வருவோம். பல பையன்களாகச் சேர்ந்து பேசிக் கொண்டு போய் வருவதால் எங்களுக்குத் தூரம் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. எங்கள் வீட்டுக்கு அப்பால் சற்றுத் தொலைவில் உள்ள தெருக்களிலிருந்தும் பையன்கள் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட பயணத்தின்போது முக்கிய கடைவீதி வழியே போக வேண்டிய அவசியம் இருந்தது. துணிக்கடை மறியல், அந்நியத் துணி எரிப்பு என்று 'சத்தியாக்கிரகப் போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் ஈடுபட்டிருந்த காலத்தில், கடைகள்முன் அவர்கள் மறியல் செய்வதும், போலீசார் வந்து அவர்களைப் பிடித்துச் செல்வதும் எங்கள் கவனத்தைக் கவரும். கோபாலசுவாமி கோவில் முன்புறத்தில் உள்ள திறந்தவெளியில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும். சத்தியமூர்த்தி, சோமயாஜலு, திரிகூடசுந்தரம் பிள்ளை போன்ற தலைவர்கள் பேசுவார்கள். அக் கூட்டங்களை வேடிக்கை பார்க்கப் போய், தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்பதில் நான் ஈடுபாடு கொண்டதும் உண்டு.