பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 வாழ்க்கைச் சுவடுக்ள் செயலாற்றுகிறேன். எல்லோரிடமும் அன்புடனும் மனித நேயத்துடனும் இன்முகத்தோடு பழகுவதையே விரும்புகிறேன். இலக்கியம், தொழில் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். வாழ்க்கைதான் முக்கியம். வாழ்க்கையை நேசிக்க வேண்டும். மனிதர்களை நேசிக்க வேண்டும். மனிதன் மனிதனாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தத்துவஞானிபோல் வாழ்க்கை நடத்திய எழுத்தாளர். ந. பிச்சமூர்த்தி அடிக்கடி இவ்வாறு கூறுவது உண்டு. அவ்வார்த்தைகள் என் மனசில் ஆழப் பதிந்திருக்கின்றன. புகழ்பெற்றவர்கள், சாமானியர்கள், புதிதாக எழுதமுற்பட்டவர்கள், பெரியவர்கள் இளைஞர்கள் எல்லோரிடமும் நான் மகிழ்ச்சியோடு இயல்பாகப் பேசிப் பழகுகிறேன். அதனால் என்னிடம் அன்பு காட்டி நேசிப்பவர்கள் தொகை அதிகம். நான் எல்லோரையும் பாராட்டி எழுதுகிறேன் என்று பலர் என்னைக் குறைகூறுவது வழக்கம். அநேகர் பரிகசிப்பதும் உண்டு. அதற்காக நான் மனவருத்தம் கொள்வதில்லை. நல்ல முறையில் பணியாற்ற ஆர்வத்தோடு முன்வருகிறவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டியது அவசியம். அப்படி உற்சாகப்படுத்தி ஊக்கம் அளிப்பதனால் திறமையுள்ளவர்கள் அதிக உற்சாகத்துடன் உழைத்து முன்னேறுவார்கள். அவ்விதம் வளர்ந்திருப்பவர்கள் பலராவர். அவ்வாறில்லாமல், ஆரம்பத்திலேயே குறைகூறியும் மட்டம் தட்டியும், நீ எல்லாம் எழுத ஆசைப்படுவதே தப்பு என்ற ரீதியில் விமர்சித்தால், வளரக்கூடியவர்களும் வளர்ச்சியடையாமல் போவதே இயல்பாகும். ஆயினும் ஒன்று. யார் என்னதான் பாராட்டி ஊக்குவித்தாலும், உண்மையான திறமையும், முன்னேற வேண்டும் எனும் உள்உந்துதலும், முன்னேறி வெற்றி பெறமுடியும் என்ற தன்னம்பிக்கையும், அயராத உழைப்பும் உடையவர்கள்தாம் வளர்வார்கள். அதற்காக ஆரம்பத்திலேயே, இதெல்லாம் எழுத்தே இல்லை. நீ உருப்படப் போவதில்லை என்ற தன்மையில், எழுதத் தொடங்குகிறவர்களின் உற்சாகத்தில் தண்ணீரை அள்ளிக் கொட்டுவது அல்லது மண்ணை வாரிப் போடுவது மனிதம் ஆகாது என்றே நான் கருதுகிறேன். நான் அறுபது வருடங்களுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கிறேன். சிறுகதை, நெடுங்கதை, நாவல், கட்டுரைகள், கவிதை, வரலாறு முதலிய பலவடிவங்களிலும் எழுதினேன். எழுதியவை அனைத்தும் அச்சில் வரவேண்டும் என நான் ஆசைப்பட்டதில்லை. நான் எழுதியவற்றை யார் படிக்கிறார்கள், அவை