பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Żół6 வாழ்க்கைச் சுவடுகள் சுவாமி விவேகானந்தர் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சுற்றித் திரிந்து பரந்த பாரத பூமியைக் கண்டறிவதில் ஆர்வம் உடையவராக இருந்தார். அவர் சந்நியாசியாக இருந்ததால் அது அவருக்கு எளிதில் சாத்தியமாகும் காரியமாகவே அமைந்தது. - பேரறிஞர் ராகுல் சாங்கிருத்யாயன் பாரதநாட்டை, அதன் மக்களின் வாழ்க்கை முறைகளை நாடு நெடுகிலும் நிலவுகிற பலவிதமான கலாசாரங்களை எல்லாம் தெரிந்துகொள்ள முயன்றார். அவருக்குத் துணிவு மிகுதியாக இருந்தது. சந்நியாசி போல அவர் திரிந்தார். ரயில் வண்டியில் டிக்கட் வாங்காமலே பரதேசிகளோடும் பிச்சைக்காரர்கள் கூடவும் சேர்ந்து பயணம் செய்தார். திபெத் நாட்டிலும், இமாலயம் வழியாகச் சீனா செல்லவும் அவர் யாத்ரீகர்களோடு, சுமைதூக்கும் கூலிக்காரன் மாதிரிச் சென்றார். இவ்வாறெல்லாம் அவருடைய வரலாறு கூறுகிறது. பல மொழிகள் கற்று பலவித ஆய்வு நூல்கள் எழுதியுள்ள சாங்கிருத்யாயன் ஊர்சுற்றியாகத் திரிந்த அனுபவங்களை 'ஊற்சுற்றியின் புராணம்' என்ற நூலில் சுவையாக விவரித்திருக்கிறார். நானும் என்னை 'ஊர்சுற்றி என்று குறிப்பிட்டு வந்திருக்கிறேன். எழுதுவது. படிப்பது இவற்றுக்கு அடுத்தபடியாக ஊர்கள் சுற்றிப் பார்ப்பதை நேசித்தேன். இந்தியாவின் பல பகுதிகளிலும் சுற்றி அலைய வேண்டும் அதன் பெரிய பெரிய ஆறுகளை எல்லாம் கண்டு களிக்க வேண்டும் என்று ஆசை வளர்த்தேன். மகாத்மா காந்திஜியுடன் நெருங்கிப் பழகிய அறிஞர் காகா காலேல்கர் இந்தியாவின் நதிகளை நேசித்தார். நதிகளைச் சகோதரிகளாகவும் சிநேகிதிகளாகவும், கங்கையை மாதாவாகவும் மதித்தார். முதலில் அவர் தமது நதிகள் பற்றிய வியப்புகளையும் ரசிப்புகளையும் 'சப்த நதிகள்' என்ற சிறுபுத்தகத்தில் வெளியிட்டார். பின்னர் இந்திய நதிகள் பற்றி ஜீவன் லீலா என்ற பெரிய புத்தகம் எழுதி வெளியிட்டார். அதில் அவர் இந்தியாவின் பெரிய நதிகள் சிறிய ஆறுகள் பலவற்றையும் கண்டு உணர்ந்தவற்றைப் பதிவு செய்திருக்கிறார். தமிழ்நாட்டின் நதிகளை அவர் கண்டு கொள்ளவில்லை. காவிரி பற்றி மட்டும் ஒரு சிறிது கூறியிருக்கிறார். நானும் அப்படி நதிகள் பலவற்றையும் தரிசிக்க வேண்டும் என்று கனவுகள் வளர்த்தேன். அதேபோல, கூடியவரை எத்தனை மலைகள்மீது ஏறமுடியுமோ, ஏறிச் சிகரங்கள்மீது நின்று விண்விரிவை, வியன்வெளியை, சூழ்நிலையை, ஆழ்நிலப் பரப்புகளை எல்லாம் கண்டு ரசிக்க வேண்டும் என்று விரும்பினேன். வெவ்வேறு இடங்கள் சேர்ந்து - கடலோர ஊர்கள் போய்அங்கங்கே உள்ள அலைகடலின் அற்புதத் தோற்றங்களை எல்லாம் பார்த்து மகிழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இவை எல்லாம் அனுபவத்தில் சுலபமாகச் சாத்தியமாகக் கூடியவை அல்ல என்று வாழ்க்கையும் காலமும் உணர்த்தின. எனவே, சாத்தியமானவரை