பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 வாழ்க்கைச் சுவடுகள் கூட்டங்கள். நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறபோது தவறாது கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றவேண்டிய கடமை அவருக்கு உண்டு. முக்கியமான அறிக்கைகள் தயாரிக்க வேண்டுமானால், அவர் எழுதிக் கொடுக்கலாம். பெரும்பாலும், செயலாளர் தயாரிக்கிற அறிக்கைகளில் தலைவர் கையெழுத்திட்டாலே போதும். ஆர்.டி.ராஜன் பல மாதங்களுக்குப் பிறகு, புதுக்கோட்டையில் எழுத்தாளர் கூட்டம் ஏற்பாடு செய்து என்னையும் அழைத்துச் சென்றார். இளைய எழுத்தாளர்கள் உற்சாகத்தோடு கலந்து கொண்டு, கருத்துக்கள் பரிமாறினர். உறுப்பினர்கள் சேர்த்து, எழுத்தாளர் உறவு அமைப்பை வலிமைப்படுத்தும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இப்படிப் பல இடங்களிலும் எழுத்தாளர் உறவு அமைக்கவும் உறுப்பினர்களாகச் சேர்ந்து இயக்கத்தை வலுப்படுத்தவும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. அறிக்கைகள் அனுப்பப்பட்டன. 'எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும் என்ற தலைப்பில் நாட்டின் நிலைமைகளை எடுத்துக் கூறும் நூல் ஒன்று எழுதித்தரும்படி ஆர்டிராஜன் என்னைக் கேட்டுக்கொண்டார். அவ்வாறே எழுதிக்கொடுத்தேன். அது சோலைத் தேனீ வெளியீடாகப் பிரசுரம் பெற்றது. 1987இல் அந்த நூலுக்குத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிப் பரிசு கிடைத்தது. அதை அடுத்து வாசகர்கள்-விமர்சகர்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதும்படி ராஜன் கோரினார். அதையும் சோலைத் தேனி வெளியிட்டது. சோலைத் தேனீ, வேறு பொருளாதார, மருத்துவ, சமூக நல நூல்களையும் பிரசுரித்திருக்கிறது. - நீண்ட இடைவேளைக்குப் பிறகு எழுத்தாளர் உறவு வேலூரில் கூடியது. உற்சாகமாகப் பலரும் கலந்து கொண்டார்கள். எழுதி ஓரளவு பெயர் பெற்ற எழுத்தாளர்களைவிட, புதிதாக எழுத வேண்டும் என்ற ஆர்வம் உடைய இளைஞர்களே இம் முயற்சிக்கு ஆதரவு காட்டினார்கள். அவர்கள், தங்களுடைய எழுத்துமுயற்சிகள் அச்சில் வருவதற்கு இந்த அமைப்பு உதவக்கூடும் என்று எண்ணினார்கள் உதவ வேண்டும் என எதிர்பார்த்தார்கள். அப்படிப்பட்ட உதவி எதுவும் கிட்ட வழியில்லை என உணர்ந்ததும் சோர்வடைந்தார்கள். சிற்சில இடங்களில் கிளைகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும், உறுப்பினர்கள் அதிகமாகச் சேர்ந்து எழுத்தாளர் உறவை வலுப்படுத்தவில்லை. சேர்ந்திருந்தவர்கள் ஒழுங்காக உறுப்பினர் கட்டணம் செலுத்தவுமில்லை.