பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 வாழ்க்கைச் சுவடுகள் இலக்கிய இதழ்கள் குறித்துத் தனித்தனிக் கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. - ஒவ்வொரு கருத்தரங்கும் இரண்டு நாட்கள் நிகழ்ந்தன. ஒவ்வொரு நாளும் முற்பகலிலும் பிற்பகலிலுமாக ஐந்து அமர்வுகள். முதல் நாளில் தொடக்க விழாவும் பின்னர் இறுதியில் நிறைவு விழாவும் சிறப்பாக அமைந்திருந்தன. தொடக்க விழாவின் போதும் நிறைவு விழாவிலும் முக்கியமான அறிஞர்கள் உரையாற்றுவது முறையாக நிகழ்ந்தது. தலைமை உரை, தொடக்க உரை, சிறப்புரை, வாழ்த்துரை, முடிவில் நிறைவுரை என அறிஞர்கள் ஆற்றிய உரைகள் அனுபவம், ஆய்வுச் சிந்தனை ஆகியவை அமைந்து நன்கு வழிகாட்டும் தன்மை பெற்றிருந்தன. ஒவ்வோர் அமர்விலும் தகுதிவாய்ந்த-வரலாற்றுப் பெருமை உடைய-சாதனை புரிந்த-இதழியல் துறையில் தனக்கெனத் தனி இடம் அமைத்துக்கொண்டுள்ள பல இதழ்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டன. தக்கவர்கள், ஆழ்ந்தமுறையில் அக்கட்டுரைகளைத் தயாரித்திருந்தார்கள். கருத்தரங்கில் கலந்துகொண்ட பலருக்கும் பயனுள்ள கருத்துக்களையும் அரிய தகவல்களையும் அக் கட்டுரைகள் வழங்கின. ஆய்வு மாணவர்கள் இவ்அமர்வுகளில் கலந்து கொண்டதன் மூலம் பெரும் பயன் பெற்றிருக்கக் கூடும். கால வெள்ளத்தில் மறைந்துவிட்ட பல சிறந்த இதழ்கள் குறித்தும், அபூர்வமாகவே கிடைக்கக்கூடிய சில இதழ்கள் பற்றியும் மிகவும் சிரமப்பட்டு அக்கறையோடு அரிதின் முயன்று நல்ல தகவல்களையும் இதழ்களின் சிறப்புத் தன்மைகளையும் தேடிக்கண்டு நல்லமுறையில் கட்டுரை தயாரித்திருந்தார்கள் கருத்தரங்கில் கட்டுரை படித்தவர்கள். ஒவ்வோர் அமர்வின் முடிவிலும் கட்டுரையாளர்கள் வாசித்த கட்டுரைகள் பற்றி அறிஞர் ஒருவர் கருத்துரை வழங்கிய ஏற்பாடு பயனுள்ளதாக இருந்தது. படிக்கப்பட்ட நான்கு அல்லது ஐந்து கட்டுரைகளை மதிப்பிட்டு, கருத்துக்களைத் தொகுத்து, விமர்சன ரீதியில் கருத்துரை வழங்கப்பட்டது கேட்போரின் சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது. ஒவ்வொரு கருத்தரங்கின் அமர்வுகளிலும் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் தனித்தனித் தொகுப்புகளாக வெளியிடப் பெறுகின்றன. இது மிகவும் பயனுள்ள ஏற்பாடு. ஒவ்வொரு தொகுதியும் தமிழ் இதழியல் குறித்த நல்ல ஆவணமாக விளங்கும் தன்மை உடையது. தமிழ் இதழியலில் ஆர்வம் உடையவர்கள் இதழியல் வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும் குறிப்பிட்ட இதழின் சிறப்பையும் தன்மைகளையும்