பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 வாழ்க்கைச் சுவடுகள் ஆயினும் எப்படியும் முயன்று போதுமான கடிதங்களைச் சேகரித்து ஒரு தொகுதி கொண்டுவந்து விடுவேன் என்று நாகரத்தினம் உறுதியாய்க் கூறினார். நாகரத்தினம் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். நல்ல இலக்கிய ரசிகர். புத்தகங்கள் வாங்கிப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். தனது தந்தையிடம் அதிகமான பற்றும் பாசமும் கொண்டிருந்தார். தந்தை இறந்து விடவும். நாகரத்தினம் அதிகம் துயருற்று அமைதி இழந்து தவித்தார். உத்தியோக மாறுதலில் மதுரை சென்றார். அன்பும் பிரியமும் கொண்டு நெருங்கிப் பழகிய நண்பர். நீண்ட கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தவர், பிறகு தொடர்பு கொள்ளாமலே ஒதுங்கிப் போனார். நண்பர் எவருடனுமே அவர் கடிதத் தொடர்போ, நேர்முக உறவோ கொண்டதில்லை. நாகரத்தினம் சில வருடங்கள் என் கடிதங்களைத் தேடிப் பெறுவதில் முனைப்பு காட்டினார். பின்னர் அக்கறை இழந்து அம்முயற்சியை நெய்வேலி, வேர்கள் இலக்கிய இயக்கம், இராமலிங்கத்திடம் ஒப்படைத்துவிட்டார். இராமலிங்கம் கடித வேட்டையில் மும்முரமாக ஈடுபட்டார். சிற்றிதழ்களில் விளம்பரம் செய்தார். வேண்டுகோள் அச்சிட்டு, பலருக்கும் அனுப்பினார். நானும் நண்பர்களுக்கு எழுதினேன். நல்ல திட்டம். வ.க கடிதங்கள் தொகுப்பாக வரவேண்டியது அவசியம், என்று பாராட்டி ஏகப்பட்ட கடிதங்கள் வந்தன. ஆயினும் நான் எழுதிய கடிதங்கள் போதுமான அளவு வந்து சேரவில்லை. முக்கிய நண்பர்கள் கூடக் கடிதங்களைத் தந்து உதவவில்லை. - பல நண்பர்கள். அவர்கள் பாதுகாத்து வைத்திருந்த கடிதங்களை அனுப்பி உதவியதை நன்றியுடன் குறிப்பிட வேண்டும். மூன்று வருடகாலம் பெரிதும் முயன்று காத்திருந்துவிட்டு 'இனியும் காத்திருப்பதில் பயனில்லை. இருக்கிற கடிதங்களை வைத்துத் தொகுப்பைக் கொண்டு வந்து விடுவோம்' என்று இராமலிங்கம் முடிவுசெய்தார். புத்தகமாக வெளியிட்டார். அழகாக வெளிவந்துள்ள கடிதத் தொகுப்புகளில் வண்ணதாசன் கடிதங்கள் தொகுப்புக் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியது ஆகும். 'எல்லார்க்கும் அன்புடன் என்ற அந்தப் புத்தகம் வண்ணதாசனின் தனித்தன்மையை நன்கு வெளிப்படுத்துவதாகும். நுட்பமான உணர்வுடன் அவர் பெற்ற அனுபவங்கள் கண்டு ரசித்த இனிமைகள், மனசில் தோன்றிய எண்ணங்கள் முதலியவற்றை அழகான தமிழில் வண்ணதாசன் பதிவு செய்திருக்கிறார் இக்கடிதங்களில்,