பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 23.9 39 கடல் கடந்து வான் புறந்து அயல் நாடுகளுக்குப் போக வேண்டும் என்று நான் ஆசைகள் வளர்த்தது இல்லை. ஆனாலும் பயணம் போய் வந்தவர்கள் எழுதிய ரசமான கட்டுரைகள் புத்தகங்களைப் படிக்க மறுத்துமில்லை. நம் நாட்டுக்கு அருகில் இருக்கிற இலங்கை பற்றியும் சுவாரசியமான கட்டுரைகள் பல படித்து ரசித்து உண்டு அறிஞர் திரு.வி.க. 'எனது இலங்கைச் செலவு என்றொரு கட்டுரை எழுதியிருந்தார். அதுதான் இலங்கைப் பயணம் பற்றி நான் படித்த முதல் கட்டுரை ஆகும். பள்ளிக்கூடப் பாடநூலில் இடம் பெற்றிருந்தது அது. 'எனது இலங்கைச் செலவு என்னும்போது யான் இலங்கைபோய் வந்ததில் எனக்கு ஏற்பட்ட பொருட்செலவை இங்குக் குறிப்பிடவில்லை எனது இலங்கைப் பயணம் என்ற பொருளிலேயே செலவு எனும் சொல்லை யான் இங்குப் பெய்திருக்கிறேன்' என்ற ரீதியில் திரு.வி.க. அந்தக் கட்டுரையைத் தொடங்கியிருப்பார். இலங்கையின் வளம், வனப்பு மற்றும் பெருமைகள், கண்டி கதிர்காமம் போன்றவற்றின் சிறப்புகள் குறித்தெல்லாம் அவர் அழகாக விவாதித்திருப்பார். 1930களில் ஆனந்த விகடன் சார்பில் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியும், சித்திரக்காரர் மாலியும் இலங்கை யாழ்ப்பாணம் போய்ப்பலநாள் சுற்றுப் பிரயாணம் செய்து திரும்பினார்கள். இலங்கைப் பயணம் பற்றியும், இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் இடங்கள், அங்குள்ள சிறப்புகள் முதலியன குறித்தும் கல்கி-கிருஷ்ணமூர்த்தி அவருக்கே உரிய தனித் தன்மையோடு ரசமாகப் பல வாரங்கள் தொடர்ந்து விகடனில் எழுதினார். இன்னும் பலபேர் 'இரத்தினத் தீவு பற்றிச் சுவாரசியமான கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றைப் படித்து ரசித்த என் உள்ளம் இலங்கை பற்றி இனிமையான சித்திரங்களைப் பதிவு செய்துள்ளது. ஆயினும் இலங்கைக்குப் போய் அவற்றை எல்லாம் கண்டு களிக்க வேண்டும் என்று ஏனோ என் மனம் விரும்பியதில்லை. 'நம் மாவட்டத்துக்காரர்கள் (திருநெல்வேலிக்காரர்கள் மனதில் சிறுவயது முதல் கொழும்பு பற்றிய நினைவுகள் இருந்து வருவது சகஜம். உறவினர்கள் மத்தியில் கொழும்புக்குப் போய்வந்தவர்கள் யாராவது இருப்பார்கள். கதிரேசன் என்ற பெயர் கூட நம் பக்கத்தில் அதிகமிருக்கும்' என்று நண்பர் வண்ண நிலவன் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். முன் நாட்களில் கொழும்புக்குப் போய் சம்பாத்தியம் பண்ணிவிட்டுத் திரும்பி வந்து கொழும்புப் பிள்ளை என்ற பட்டப் பெயரோடு பெருமையாக