பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 245 அடையவேண்டியிருந்தது. ஒவ்வொரு இடமும் துரதுரமாகத்தான் இருந்தது. அங்கே நிகழ்ச்சி முடிந்ததும் உடனேயே கொழும்பு திரும்பினோம். ஒவ்வொரு நாளும் இப்படி பல நூறு மைல்கள் பிரயாணம் செய்ய நேரிட்டது. பயண அலுப்பு ஒய்வு என்ற பாராது. உடனடியாக ஏதாவது இலக்கிய நிகழ்ச்சி, எழுத்தாளர் சந்திப்பு அல்லது பேட்டி என்று எதிலாவது ஈடுபட வேண்டியதாயிற்று. இவ்விதம் காரில் போகிற வருகிறபோது கொழும்பு நகரின் பலபகுதிகளையும் பார்க்கமுடிந்தது. கண்டியின் அழகை ஒருவாறு ரசிப்பது சாத்தியமாயிற்று. மற்றப்படி அங்குள்ள வரலாற்றுப் பெருமை பெற்ற-காண வேண்டிய இடங்கள் எவற்றையும் நாங்கள் பார்க்கவில்லை. பார்த்து ரசித்து மகிழ்வதற்கான வாய்ப்புகள் கிட்டவில்லை. அட்டனுக்குப் போகிற நீண்ட நெடிய, வளைந்து நெளிந்து மேலேறிச் செல்கிற பாதையில், மலைக்குப் பின் மலையாக வருகிற இடங்களையும், அங்குத் தென்பட்ட தோட்டங்களையும், அவற்றில் உழைப்பவர்களையும், ஒடுகிற ஓட்டத்தில் வேகப் பார்வையில் விழுங்கிக் கொள்கிற வாய்ப்புகிட்டியது. இது மகிழ்ச்சிகர அனுபவமாகவே இருந்தது. கொழும்பிலிருந்து திருகோணமலைக்குப் போகிற வழியில் ஒன்றுக்குப் பின் ஒன்றாக, பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவக் கண்காணிப்பு நிலையங்களையும் பயணிகள் நிறுத்தப்பட்டுச் சோதனை போடப்படுவதையும் கண்டுணர முடிந்தது. இந்துசமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களம் சேர்ந்த அதிகாரி ஒருவராவது எங்களோடு வந்ததனால், எங்கள் பயணம் இடைஞ்சல் எதுவுமின்றி இனிதே அமைந்திருந்தது. காரில் இருந்து இறங்கிச் சோதனைக்கு உட்பட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லாது போயிற்று. திருகோணமலைப் பகுதி இராணுவக் கண்காணிப்பிலும் காவலிலும் இருக்கிறது. அதனால் அங்கே தாராளமாக விருப்பம் போல் சஞ்சரிக்கவோ, பார்க்கவேண்டியவற்றைப் பார்ப்பதோ சாத்தியமில்லை. திருகோணமலை வட்டாரத்தில், திருகோணநாதர் ஆலயத்தில் ஏழு கிணறுகள் இருக்கின்றன. அவற்றில் உள்ள நீர் வெவ்வேறு வெப்ப தட்ப நிலை கொண்டது. ஒன்றில் மிக உஷ்ணநீர் கிடக்கும், இன்னொன்றில் சற்று சூடான வெந்நீர், வெதுவெதுப்பான நீர் என்ற தன்மையில் பலவகையில் நீர் காணப்படும். இயல்பாகவே இப்படி நீர் அக்கிணறுகளில் ஊறுகின்றது. அவை அவசியம் பார்க்கப்பட வேண்டியவை என்று சொன்னார்கள். அவற்றைக் காணவும், உஷ்ண-மிக உஷ்ண-அதிமிகு உஷ்ண - சுடுநீரை அள்ளி உணரக்கூடிய பேறு நாங்கள் பெற்றிருக்கவில்லை. சாமான்யர் மொழியில் சொல்வதென்றால் அதுக்கு எங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. அந்த இடமெல்லாம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தது.