பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 வாழ்க்கைச் சுவடுகள் தாழையூத்து சிமென்ட் கம்பெனி, நூற்பாலைகள், பாலிடெக்னிக் முதலியன தோன்றிச் செழித்த காரணத்தால் காலவேகத்தோடு பிரமாத வளர்ச்சி பெற்றுவிட்டது. சங்கர்நகர் என்ற பெயரும் பெற்று, டவுன்ஷிப் அந்தஸ்து ஏற்று, பரபரப்பும் ஜனநெருக்கமும் கூடிய பகுதி ஆகியுள்ளது. வாடகை அதிகம் வராது. வாடகைக்குக் குடியிருக்க வருகிறவர்கள் வீட்டை நன்கு பேணமாட்டார்கள் என்பதால் அந்த வீட்டை பெரிய அண்ணாச்சி காலத்திலேயே வாடகைக்கு விட்டதில்லை. நானும் வாடகைக்கு விடவேண்டாம் என்றே சொல்லி வந்தேன். வீட்டில் முத்தம்மாள் எனும் இசக்கி என்கிற முதியவள் இருந்துவந்தாள். வீட்டைப் பெருக்கி, அவ்வப்போது மெழுகிச் சுத்தமாக வைத்துக் கொண்டிருந்தாள். என் அம்மா காலத்திலிருந்தே அவ்வீட்டில் வேலைக்காரியாக இருந்தவள். அம்மாவும் அண்ணாச்சியும் சாகிற காலத்தில் இசக்கி எப்போதும்போல் இந்த வீட்டிலேயே இருக்கட்டும் அவள் சாகிறவரை இருந்து விட்டுப்போகட்டும் என்று சொல்லியிருந்தார்கள். அவர்களது கடைசி கால விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அண்ணா கோமதிநாயகமும் நானும் அவளை அவ்வீட்டில் தங்கவைத்திருந்தோம். ஏதேனும் பணம் கொடுத்து அவளை அனுப்பிவிடும்படி உறவுக்காரர்கள் யோசனை கூறினார்கள். நாங்கள் இசையவில்லை. மாதம்தோறும் அவளுக்குப் பணம் அனுப்பி உதவினோம். நான் ஊரில் போய்த் தங்குகிற மாதங்களில் தாராளமாக அனைத்துப் பொருள்களும் வாங்கிக் கொடுப்பதுடன், பணமும் நிறையவே கொடுத்துவந்தேன். அவள் பண ஆசை பிடித்தவளாக இருந்தாள். பொய்க் காரணங்கள் கூறி இருபது முப்பது என்று பணம் கேட்டுவாங்குவதை வழக்கமாக்கினாள். நான் அங்கு போகாத காலங்களில் வீட்டுச் சாமான்களை எடுத்து விற்றுக் காசாக்கினாள். அவள் மகளுக்கும் பேத்திக்கும் நெல்லாகவும் பொருள்களாகவும் கொடுப்பதில் ஆர்வம் கொண்டாள். அத்துடன், வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு, அந்தப் பணத்தையும் அவளே எடுத்துக்கொண்டாள். நான் அங்குப் போன சமயத்தில், பெரிய வீட்டில் ராத்திரி நேரங்களில் தனியாக இருப்பதற்குப் பயமாக இருந்தது. அதனாலே துணைக்காக அவர்களைக் குடியிருக்கச் சொன்னேன் என்று விளக்கம் கூறினாள். வாடகைக்கு வந்திருந்தவர்கள் எருமை மாடுகள், ஆடுகள், கோழிகள் வளர்த்தார்கள். வீட்டின் சூழ்நிலையையே கெடுத்து அசிங்கப் பரப்பாக்கினார்கள். காலி பண்ணச் சொன்னாலும், காலி பண்ணிப் போவதாக இல்லை.