பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 283 விலைக்குக் கொடுத்துவந்தார்கள். கட்டில், ஊஞ்சல், பெஞ்சுகள், பெட்டிகள் முதலிய மரச்சாமான்களை விலைக்குக் கேட்ட உள்ளுர்க்காரர்கள் சிலரிடம் விற்றோம். அநேகம் பொருட்களை இனாமாகவே சிலருக்கு வழங்கினோம். சுவர்கள் முழுக்கத் தொங்கிய போட்டோக்களையும் இதர படங்களையும், எஞ்சிய புத்தகங்கள் எழுத்து நோட்டுக்களையும் என்ன செய்வது என்பதே எனக்குப் பெரும் பிரச்சினையாக இருந்தது. அதனாலேயே வீடு விற்கிற யோசனையை நான் ஏற்றுக் கொள்ளாமலே தட்டிக்கழித்துக் கொண்டிருந்தேன். இவற்றை எல்லாம் எங்கே கொண்டு பாதுகாப்பாக வைத்திருப்பது என்ற கவலை எனக்கு. என் வாழ்நாளில் எனக்குச் சித்திக்காமல் போன ஒன்று, எனது புத்தகங்கள் அனைத்தையும், என் எழுத்துப்பிரதிகள் மற்றும் அச்சில் வந்தவை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வைத்துக்கொள்ள வசதி செய்யும் ஒரு சிறு வீடு. அப்படி பாதுகாப்பான, வசதியான ஓர் இடத்தைத் தேடிக்கொள்ள முடியாமல் போனதனாலே என்னுடைய புத்தகங்கள் சென்னையிலும், ராஜவல்லிபுரம் வீட்டிலுமாகக் கிடக்க வேண்டிய நிலை. புத்தகங்களைத் தேவைப்படுகிறபோது விருப்பம்போல் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய விதத்தில் அடுக்கி வைப்பதற்கான வசதிகள் இல்லாமல் போயிற்று. ஒரு புத்தகம் அல்லது எழுத்துப் பிரதி அல்லது அச்சில் வந்த நறுக்கு அல்லது பத்திரிகை தேவைப்படுகிறபோது, தற்சமயம் அடுக்குகள் பலவற்றை எடுத்துக் குழப்பித் தேடி அவதிப்பட வேண்டியிருக்கிறது. புத்தகங்களை வைத்துப் பாதுகாக்கப் போதிய வசதிகள் இல்லாததால் நான் படிக்கிற புத்தகங்களையும் இதழ்களையும் படித்து முடித்ததும் யாருக்காவது வழங்கிவிடுகிறேன். மதிப்பு மிக்க ஆங்கில நூல்களை விரும்பிப் படித்து ரசிக்கக் கூடியவர்கள் எவருமிலர். இனி வரும் காலத்தில் இந்நிலை மேலும் மோசமாகவே செய்யும். சேர்த்து வைத்த ஆங்கில இலக்கிய நூல்களை எந்தக் கல்லூரி நூலகத்துக்காவது கொடுத்துவிடலாம் என்றால், அவற்றை வைப்பதற்குப் பாதுகாப்பான அலமாரிகளையும் நாம் கொடுக்க வேண்டும் என்று கல்லூரிகள் எதிர்பார்க்கின்றன என்று ஓர் அன்பர் ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்தார். ராஜவல்லிபுரத்தில் கறையான் தின்றவை, எலிகள் குதறியவை போக எஞ்சியிருந்த நூல்களையும் எழுத்துப் பிரதிகளையும் தமது வீட்டில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்று கூறி இனிய நண்பர் கி. பூரீதர் உதவிபுரிய முன்வந்தார்.