பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 237 வந்தவாசி தன. இல. சிவகுமார் இலக்கிய தாகம் கொண்ட இளைஞர். சிரமங்களோடு சிகரம் தொட வேண்டும் என்ற இலட்சிய நோக்குடன் பூங்குயில் என்ற சிற்றிதழை நடத்துகிறார். தரமான இலக்கிய இதழாக அது கால ஒழுங்கற்று வந்து கொண்டிருக்கிறது. என்னிடம் மிகுந்த பற்றுதல் கொண்ட இனிய நண்பர். கவிதைகள், கட்டுரைகள் எழுதுகிறார். ஒரு முறை அன்புடன் என்னை வந்தவாசிக்கு அழைத்து அவரும், பூங்குயில் துணை ஆசிரியர் அ. வெண்ணிலாவும் விசேஷமாக ஒரு பாராட்டு விழா நடத்தி, பணமுடிப்பும் அளித்தது என்றும் நினைவில் நிற்கும் நிகழ்ச்சி ஆகும். ம.ந. ராமசாமி நாற்பது வருடங்களுக்கும் மேலாகவே நட்புறவு கொண்டிருப்பவர். முதலில் சென்னையில் அரசு பொதுப் பணித்துறையில் வேலை பார்த்தார். அதை விட்டு விட்டு, திருச்சி தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பதவி ஏற்றுப் பல வருடங்கள் உழைத்தார். கவிதை, புதுமையான சிறுகதைகள், சிந்தனை நிறைந்த குறுநாவல்கள். நல்ல நாவல்கள், குழந்தை இலக்கியம், நகைச்சுவைக் கதைகள் கட்டுரைகள் என்று பல வடிவங்களிலும் தரமான படைப்புகளை உருவாக்கியவர். இப்போதும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார். அவர் திருச்சியில் வசித்தபோது நான் அவர் வீட்டில் விருந்தாளியாகத் தங்கியிருக்கிறேன். தற்சமயம் அவர் கோயம்புத்தூரில் வசிக்கிறார். தொடர்ந்து கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார். சர்ச்சைகளைத் துண்டும் விதத்தில் புதிய கருத்துக்களை வெளிப்படுத்தும் எழுத்துக்களை எழுதுவதில் உற்சாகமுடைய நண்பர். ஆ. பழநியப்பன் முன்னொரு காலத்தில் தாமரை இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றிவர். தி.க.சிவசங்கரன். எம்.கே. இராமசாமி, ஆ. பழநியப்பன் ஆகிய மூவரும் ஆசிரியர் குழுவாக இயங்கித் தயாரித்த பத்து ஆண்டு காலத்திய நூறு இதழ்கள் தாமரையின் வரலாற்றிலேயே மிகச் சிறப்பானவையாகும் என்று புகழப்பட்டுள்ளன. ஆ.ப. சிறுகதைகள், தொடர்கதைகள் அதிகம் எழுதியுள்ளார். அவை புத்தகங்களாக வெளிவரவில்லை. 'காவேரிக் கரையினிலே' என்ற நாவல் மட்டும் பிரசுரம் பெற்றது. இப்போது அவர் மோகனூரில் வசிக்கிறார். விடாது சுவாரசியமான கடிதங்கள் எழுதுகிறார். சுப்ரபாரதிமணியன் திருப்பூரைச் சேர்ந்தவர். சென்னையில் அவர் பயிற்சி பெற்ற காலத்தில் அவராக வந்து அறிமுகம் செய்து கொண்டார். தொலைபேசித் தொடர்புத் துறையில் பணிபுரிகிறார். அதனால் பல்வேறு இடங்களுக்குப் போக நேர்ந்தது. செகந்தராபாத்தில் பல வருடங்கள் வசித்தார். 'கனவு’ என்ற சிற்றிதழைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்துகிறார். கவிதை, கதை, நாவல், பயணக் கட்டுரை என்று அதிகம் எழுதியுள்ளார். திருப்பூர் பனியன் தொழிற்சாலைக் கழிவுகளால் சுற்றுப்புறச் சூழ்நிலையும் மனிதர் வாழ்க்கையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதை அடிப்படையாக்கி, 'சாயத்திரை' என்ற நாவலைப் படைத்திருக்கிறார். அது பரவலான கவனிப்பையும் பாராட்டுகளையும் பெற்றுத் தந்திருக்கிறது. இனிய நண்பர்.