பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2Z4 வாழ்க்கைச் சுவடுகள் படைப்புகளில் ஈடுபாடு கொள்கிறார்கள். மற்றவர்கள் படிப்பதற்குச் சிரமப்படுத்தாத லைட் ரீடிங் சமாச்சாரங்களை பல்சுவைப் பத்திரிகைகள் என்று சொல்லப்படுகிற ஜனரஞ்சகமான இதழ்களில் வெளிவருகின்ற கதைகள், பொழுதுபோக்குத் துணுக்குகள், வம்புகள் வதந்திகள், கிளுகிளுப்பு மற்றும் கிசுகிசுச் செய்திகள் முதலிவற்றைப் படிப்பதிலேயே திருப்தி காண்கிறார்கள். சினிமா தமிழ் மக்களை ஆட்டி வைக்கிற கவர்ச்சி சக்தியாக வளர்ந்துவிட்டதால், சினிமா உலகம் சம்பந்தமான செய்திகள் துணுக்குகள் வம்பளப்புகளைக் கவர்ச்சி நிறைந்த படங்களோடு அதிகம் வெளியிடுவதிலேயே வணிக நோக்குப் பத்திரிகைகள் கருத்தாக இருக்கின்றன. வாசகர்களும் அவ்விதமான பத்திரிகைகளைப் புரட்டுவதிலேயே ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள். மக்களின் சுவையைப் புரிந்துகொண்டு, பத்திரிகைத் துறையில் லாபம் காண ஆசைப்படுகிறவர்கள் மர்மம்-திகில்-துப்பறிதல் சமாச்சாரங்கள் கொண்ட கதைகளையும் காதல், ஆண் பெண் உறவுச் சிக்கல்கள் முதலியன மிகுந்த தொடர்கதைகளையும் வெளியிட்டு வாசகர்களை ஈர்க்க முயல்கிறார்கள். செக்ஸ் ஆலோசனைகள், தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரைகள், பக்தி விஷயம், கோயில் விவரிப்புகள் முதலியனவும் மசாலாக்களாகச் சேர்க்கப்படுகின்றன. வெகுஜனப் பத்திரிகைகளில் கதைகள், தொடர்கதைகள் எழுதிக் கவனிப்புப் பெற்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களை உடனடியாகப் புத்தகங்களாக வெளியிடுவதில் ஆர்வம் உடைவர்களாக இருக்கிறார்கள் நூல் வெளியீட்டாளர்களும். வாசகர்களின் சுவைக்குத் தீனிபோடுகிறவிதத்தில் இன்வெஸ்டிகேட்டிங் ஜர்னல்ஸ்-புலனாய்வுப் பத்திரிகைகள் என்று சொல்லிக்கொள்கிற இதழ்கள் பலவும் விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்த அக்கப்போர் சமாச்சாரங்களை உண்மைச் செய்திகள் என்று அச்சிட்டு விற்பைனை செய்கின்றன. வாசகர்களில் வயது முதிர்ந்தவர்களும் பெண்களும் காலவேகத்தில் படிப்பதை விடத் தொலைக்காட்சிப் பெட்டிகளின்முன் அமர்ந்து படங்கள் பார்ப்பதே ரசனைக்கு இனிய, எளிய, பொழுதுபோக்கு என்று கண்டுகொண்டார்கள். இவர்கள் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொள்வதில்லை. இந்தவிதமான சூழலில்தான் சகல தரத்து எழுத்தாளர்களும் எழுதி வளர வேண்டியிருக்கிறது. அவர்களுடைய வளர்ச்சிக்குப் பத்திரிகைகளை நம்பவேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலைமையிலும் அவர் நல்ல எழுத்தாளர் இல்லை: நான் எழுதுவதுதான் இலக்கியம் என்றெல்லாம் பழிப்பதும் பரிகசிப்பதும் குறை கூறுவதும் மட்டம்தட்டுவதும் எழுத்தாளர்கள் பெரும்பாலோரின் இயல்பாக இருக்கிறது.