பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4s; வாழ்க்கைச் சுவடுகள் வயல்கள் போதுமான அளவு இருந்தன. அவை கட்டுக்குத்தகைக்கு விடப்பட்டிருந்தன. இரு போக நிலம் தான். ஆயினும் தொடர்ந்து வருடம் தோறும் இருமுறையும் நெல் விளைச்சல் இருந்ததில்லை. ஒரு முறை விளைந்தால், அடுத்த பூ விளைச்சல் இராது. இதனால் எல்லாம் கடன்கள் ஏற்பட்டன. கடன்களை அடைக்க வயல்களை ஒவ்வொன்றாய் விற்க நேர்ந்தது. இரண்டு கோட்டை விதைப்பாடு நிலம் முதலில் இருந்தது. நாங்கள் ஊரோடு வந்தபோது அரைக் கோட்டை விதைப்பாடு நிலம்தான் எஞ்சியிருந்தது. சிக்கனமான முறையில் பெரும் சிரமங்கள் இல்லாமல் வாழ முடிந்தது. அந்நாட்களில் விலைவாசிகள் உயர்ந்திருக்கவில்லை. பொருள்கள் எல்லாம் மலிவான விலையில் கிடைத்தன. வளம் குன்றாத வாழ்வு என்றே சொல்லலாம். உள்நாட்டில் விளைச்சல் இல்லாது போகிற காலங்களில் அரசு பர்மாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய வகைபண்ணியது. பர்மா அரிசி ஒரு ரூபாய்க்குப் பத்துப்படி பன்னிரண்டுபடி என்று விற்கப்பட்டது. நயமான வெள்ளை அரிசி, வீட்டு வாடகைப் பிரச்சினை இல்லை. வயலில் நெல் விளைந்த காலங்களில் அரிசிக்குக் கவலை இல்லை. மற்றப் பொருள்கள் எல்லாம் - என் பெரிய அண்ணா அடிக்கடி சொல்வது போல் உப்பு தொடுத்து கற்பூரம் வரை பணம் கொடுத்துத் தான் வாங்க வேண்டும். பணவரவுக்கு வழி செய்யும் விதத்தில் நாங்கள் ஏதாவது வேலைக்குப் போயாக வேண்டும் என்ற நிலைமை. அந்நாட்களிலும் வேலை எளிதில் கிடைக்காது எனும் நிலைதான். எனது பள்ளிப்படிப்பு நிறைவுற்று ஒரு வருடம் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு எனக்கு ஒரு வேலை கிடைத்தது. எங்கள் ஊரைச் சேர்ந்த உறவினர் ஒருவர் சர்க்கார் விவசாய இலாகாவில் உயர் பதவியில் இருந்தார். இவர் முயற்சிசெய்து அத்துறையில், ஒரு விவசாய ஆபீசில் எனக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். குமாஸ்தா வேலை. அந்த வேலை, இராமநாதபுரம் ஜில்லா மாவட்டம் என்ற பெயர் அப்போது ஏற்பட்டிருக்க வில்லை. பரமக்குடியில் கிடைத்தது. அந்த ஊரில் புதிதாக விவசாய டிமான்ஸ்ட்ரேட்டர் ஆபீஸ் திறக்கப்பட்டிருந்தது. அதற்குப் புதிதாகக் கிளார்க் நியமனம் ஆயிற்று. அந்தப் பதவிக்கு ஸ்டோர் கீப்பர் என்று பெயர். சொந்த ஊரை விட்டு ரொம்ப துரத்தில் உள்ள ஒரு இடத்துக்குப் போய், சின்னப் பையனான நான் தனியாக இருந்து வேலை பார்ப்பேனா என்ற சந்தேகம் என் அம்மாவுக்கும் உறவுக்காரர்களுக்கும் இருந்தது. வேறென்ன செய்வது? இருந்து பழகவேண்டியது தான். போகப்போக எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணி என்னை ரயிலேற்றி அனுப்பி வைத்தார்கள் 1937 நவம்பர் முதல் வாரத்தில்,