பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 79 வெறைட்டி ஹால் ரோடில் ஒரு சிறிய வீட்டில் பி.எஸ். செட்டியார் குடும்பத்துடன் வசித்தார். அங்கு ஒரு சிறு அறை தான் சினிமா உலகம் அலுவலகம். புத்தகங்கள், பழைய பத்திரிகைத் தொகுப்புகள் கொண்ட அலமாரிகள், மேஜை நாற்காலிகள், டைப்ரைட்டிங் மிஷின் முதலியன நிறைந்த நெருக்கடியான இடம் அந்த அறை. அங்குதான் நான் தங்கினேன். அருகில் இருந்த ஒட்டலில் சாப்பாட்டுக்கு ஏற்பாடுகள் செய்தார் செட்டியார். பக்கிரிசாமி செட்டியார் என்பது அவர் முழுப்பெயர். பத்திரிகை ஆரம்பிப்பதற்கு முன்பு அவர் சென்னையில் ஒரு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். வளர்ந்து கொண்டிருந்த சினிமாத் துறை அவரை ஈர்த்தது. பள்ளிக்கூட வேலையை விட்டுவிட்டுச் சினிமா உலகத்தில் புகுந்தார். தமது பெயரை நாகரிகமாகப் பண்டிட் பி.எஸ்செட்டியார் என்று மாற்றிக் கொண்டார். ராஜா தேசிங்கு, காளமேகம் போன்ற சில படங்களின் தயாரிப்பில் பொறுப்பேற்றுச் செயல்புரிந்தார். அந்நாளைய சினிமா வட்டாரத்தில் ஒரு பிரபலஸ்தராகத் தெரியவந்திருந்தார். வளர்ந்து கொண்டிருந்த சினிமாத் தொழிலை ஒட்டி சினிமாப் பத்திரிகைகளும் தோன்றி வளரலாயின. இந்தியா முழுவதிலும் பெயர் பெற்ற சினிமா இதழாக, பாபுராவ் பட்டேலின் பிலிம் இந்தியா' என்ற ஆங்கிலப் பத்திரிகை விளங்கியது. அவருடைய முரட்டுக் கிண்டலும், தடாலடி பதில்களும், சூடான விமர்சனங்களும் பாபுராவ் பட்டேலுக்கும் அவருடைய பத்திரிகைக்கும் பரபரப்பான கவனிப்பைப் பெற்றுத் தந்தன. அவரது பாணியில் தமிழ்நாட்டிலும் சில ஆங்கில இதழ்கள் தலையெடுத்தன. தமிழில் முதலாவது சினிமாப் பத்திரிகை என்று பி.எஸ். செட்டியார் சினிமா உலகம் - சினிமா ஒர்ல்ட் என்ற மாதம் ஒருமுறை இதழை ஆரம்பித்து நடத்தினார். வெகு காலம் வரை இதழின் விலை அரையனாவாகத் தான் இருந்தது. சாதாரணத் தாளில், ரோஸ் நிறக் காகித அட்டையுடன் அது வெளிவந்து கொண்டிருந்தது. பிற்காலத்தில் சினிமா சஞ்சிகைகள் வரித்துக் கொண்ட மினுமினுப்பான அட்டை, வர்ணப் படங்கள், நடிகையரின் கவர்ச்சிப்படங்கள். நடிகநடிகையர் பேட்டி, அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகள் முதலிய எதுவுமே சினிமா உலகம் பத்திரிகை பெற்றிருந்ததில்லை. திரைஉலகச் செய்திகள், தமிழ் - இந்திஆங்கிலப் படங்கள் பற்றிய தகவல்கள், விமர்சனங்கள், கேள்வி பதில்கள் இடம் பெற்றிருந்தன. இவை போக சினிமா உலகம் இதழுக்குத் தனிச்சிறப்புப் பெற்றுத் தந்த முக்கிய விஷயம், அந்தப் பத்திரிகைக்காக அவ்வப்போது உழைத்த துணை ஆசிரியர்களின் எழுத்தாற்றல். சினிமா உலகத்தின் வாய்ப்புகளை நாடி வந்து,