பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 87 காங்கிரஸ் பிரமுகர்களையும் கடுமையாகத் தாக்கி எழுதி வந்தார் அவர் நகரதூதனில் 'பேனா நர்த்தனம் என்பது சூடும் சுவையும் வேகமும் நிறைந்த பகுதி. திருமலைசாமிதான் அதை எழுதினார். நகரதூதன் தாக்குதல்களுக்கு எதிர்த்தாக்குதல் கொடுக்க வேண்டும். திருமலைசாமியின் சாடல்களுக்கு உரியமுறையில் பதிலடி தரவேண்டும் என்று திருச்சி மாவட்ட காங்கிரஸ்காரர்கள் கருதினார்கள். எனவே கிராம ஊழியன்' என்ற பெயரில் ஒரு பத்திரிகையைத் துறையூரில் ஆரம்பித்து நடத்தினர். ஆசிரியர் பூரணம் பிள்ளை சிறிது காலத்தில் இறந்து போனார். பத்திரிகையை எப்படி நடத்துவது என்ற நெருக்கடி எழுந்தது. விழுப்புரத்தில் 'ஆற்காடு தூதன் சரிவர நடக்கவில்லை. பத்திரிகை நடத்த வேண்டும் என்ற ஆர்வம் திருலோக சீதாராமுக்கு அதிகம் இருந்தது. அ.வெ.ர.கி. ரெட்டியார் அவர் நண்பர். அவரும் பாரதி பக்தர். பாரதி இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். திருலோகமும் ரெட்டியாரும் கலந்து பேசி, மற்றும் சில பிரமுகர்களையும் சேர்த்துக் கொண்டு, ஒரு லிமிட்டெட் நிறுவனம் அமைத்தார்கள். அது அச்சாபீஸ் நடத்தியதுடன் கிராம ஊழியன் பத்திரிகையையும் நடத்த முன் வந்தது. திருலோக சீதாராம் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர் துறையூருக்கே வந்துவிட்டார். அரசியல் வார இதழாக கிராம ஊழியன் வெற்றிகரமாக வளரமுடியவில்லை. இக் காலகட்டத்தில் திருச்சியில் விராராஜகோபாலன் நடத்திய மறுமலர்ச்சி இலக்கிய இதழான ‘கலாமோகினி' எழுத்தாளர் வட்டாரத்திலும் பத்திரிகை உலகிலும் நல்ல கவனிப்பு பெற்று வளர்ந்தது. நாமும் இது மாதிரி ஓர் இலக்கியப் பத்திரிகை நடத்தலாமே என்ற எண்ணம் திருலோகம், அ.வெ.ர.கி இருவருக்கும் ஏற்பட்டது. இச்சந்தர்ப்பத்தில், இந்தியாவில் ஆட்சிபுரிந்த பிரிட்டிஷ் அரசு பத்திரிகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் ஒன்று கொண்டுவந்தது. அதன்படி பத்திரிகைகள் இன்னின்ன விஷயங்களை வெளியிடக்கூடாது அரசு அதிகாரிகளின் கண்காணிப்பு ஏற்படுத்தப்படும் என்றெல்லாம் விதிகள் வகுத்தது. பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறிக்கும் அம்முயற்சியை எதிர்த்து இந்தியப் பத்திரிகைகள் பல தங்கள் வெளியீட்டை நிறுத்திக் கண்டனம் தெரிவித்தன. தமிழ்நாட்டிலும் தினமணியும் மற்றும் சில தினசரிகளும் பிரசுரிப்பதை நிறுத்தி அரசின் போக்கிற்கு எதிர்ப்புக் காட்டின. இதையே காரணமாகக் கூறி கிராம ஊழியனும் வெளிவருவதை நிறுத்திக் கொண்டது கிராம ஊழியன் இதழை, கலாமோகினி போல இலக்கிய இதழாக மாற்றலாம்; மறுமலர்ச்சி இலக்கிய எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலன் கும்பகோணத்தில் சும்மாதான் இருக்கிறார். அவருடைய எழுத்துக்களைச் சென்னை இலக்கியப் பத்திரிகைகள் ஏற்று வெளியிடுவதில்லை. அவரைக் கெளரவ ஆசிரியர் ஆக்கி ஊழியனை நடத்தலாம் என்று திருச்சி இலக்கிய நண்பர்கள் யோசனை கூறினார்கள். அவ்வாறே செயலாற்றப்பட்டது. -