பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

31


கட்டிட காண்டிராக்ட் கம்பெனியை ஆரம்பித்தார். இக் கம்பெனி ஆரம்பத்தில் அதிக வசதிகள் பெற்றிருக்கவில்லை. ஆனாலும் கெய்சருடைய சலியா உழைப்பின் காரணமாக வெகு சீக்கிரத்திலேயே அது பிரபலம் அடைந்தது. அதிலிருந்து கப்பல் கட்டும் தொழிலை மேற்கொண்டார். அவர் கப்பல் கட்ட ஆரம்பித்த சமயமும் இரண்டாவது உலக போர் மூண்டதும் சரியாக இருந்தது. அதனால் கப்பல்களுக்கு அதிகக் கிராக்கி ஏற்படலாயிற்று. கெய்ஸர் மனத்தில் ஒரு புது யோசனை உதித்தது சாதாரணமாக, கப்பல் கட்ட எல்லாரும் பின்பற்றும் வழியை அவர் கடைபிடிக்க விரும்ப வில்லை. பழைய முறையினால் கப்பல் கட்டி முடிக்க அதிக நாட்கள் ஆகின்றன. போர் காலத்தில், தாமதமாக வேலை செய்வதால் அபாயம் அதிகரிக்கும் அதை தடுக்கப் புதுவழிகள் தேவை என்று கெய்ஸர் தீவிரமாக சிந்தித்தார். மோட்டார் தொழிற்சாலையில் ஒவ்வொரு சாமானையும் வெவ்வெறு இடங்களில் தயாரிப்பார்கள். பிறகு எல்லாவற்றையும் ஒரு இடத்துக்குக் கொண்டுவந்து பூட்டுவார்கள். அந்த முறையை இதில் பின்பற்ற கெய்ஸர் எண்ணினார். முதலில் இதற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. பலர் அப்படி முடியவே முடியாது என்றும் கூறினர். ஆனால், கெய்ஸர் அதைப் பொருட்படுத்தாமல், தம் போக்கில் வேலையைச் செய்யலானார். சில மாதங்களிலேயே அவருடைய கப்பல் கட்டும் திறமை மிகப் பிரபலம் அடைந்தது. அமெரிக்க அரசாங்கமே அவருடடைய புரட்சிகரமான யோசனையைக் கண்டு அதிசயித்தது.