வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்
55
மார்கோனிக்கு, அதைத் தம் வீட்டின் கூரைமீது ஏறிநின்று உரத்த குரலில் எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவருக்குத் தைரியம்தான் வரவில்லை. மக்கள் அவர் சொல்வதை நம்புவார்களா என்று சந்தேகப்பட்டார். அவர் சந்தேகப்பட்டது போலவே, மக்களும் முதலில் நம்பவில்லை, நிதர்சனமாகக் காட்டிய பிறகே நம்பினர். அப்பொழுதும் கூட மார்கோனியின் தகப்பனாருக்கு தம்முடைய பிள்ளையின் ஆராய்ச்சியின் மீது சந்தேகமே இருந்து வந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்தார் மார்கோனி கண்டுபிடித்த ரேடியோ சாதனத்தின் உரிமைகளை 50,000 பவுன்களுக்கு வாங்கிய பிறகே அவருடைய சந்தேகம் தீர்ந்து மகிழ்ச்சி அடைந்தார்.
மார்கோனி தம்முடைய ஆவலைப் பூர்த்தி செய்து கொள்ள ரேடியோ சாதனத்தை கண்டுபிடித்தார். அதன் மூலம் தகப்பனார் கொண்டிருந்த கவலைகளையும் போக்கினார். ஆனால் ரேடியோவை கண்டுபிடித்த பிறகு அவருக்கு பல அபாயங்கள் தோன்றாமல் இல்லை. ரேடியோ இயங்குவதால் தங்களுடைய உடலில் மின்சாரம் பாய்வதாக பலர் குற்றம்சாட்டி, பயமுறுத்திக் கடிதங்கள் எழுதினார்கள். அதில் ஒரு ஜெர்மானியன் இங்கிலாந்துக்கே வந்து அவரைக் கொல்லப் போவதாகவும் கடிதம் எழுதியிருந்தான். ஆனால், அக்கடிதம் ரகசியப் போலீசாரிடம் ஒப்படைத்தல் மூலம் அவன் பிடிக்கப்பட்டு பின்னர் காவலில் வைக்கப்பட்டான்.