பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


இன்ஷ்யூரன்ஸ் செய்துகொள்ள முன்வந்தவர் பெயர் கிளைடுபெட்டி. அவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இளைஞராக இருக்கும்போது அவர் தம் மனம்போல் திரிவதில் நாட்டம் கொண்டவர். ஒரு சமயம், சர்க்கஸ் கம்பெனி ஒன்று அவர் இருந்த ஊருக்கு வந்திருந்தது. அந்த சர்க்கஸ் கம்பெனியில் காட்டு மிருகங்களை ஆட்டி வைப்பதைக் கண்டு கிளைடுபெட்டி அதிசயித்தார். அதைப்போல் தாமும் காட்டு மிருகங்களை ஆட்டிவைக்க வேண்டும் என்று எண்ணினார் உடனே வீட்டிற்கு வந்ததும் வீட்டிலிருந்த நாய்களை எல்லாம் ஒன்று சேர்த்து, சர்க்கஸ் வேலைகளைப் பயிற்றுவிப்பதில் முனைந்தார். சில நாட்களிலேயே வீட்டிலிருந்த ஆறு நாய்களும் அவர் சொன்னபடி செய்யலாயிற்று. பிறகு, அவர் அந்தச் சர்க்கஸ் கம்பெனிக்குச் சென்று தம்மைச் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அவர் இளைஞராக இருப்பதைக் கண்டு சர்க்கஸ் கம்பெனிக்காரர் அவரை சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டனர். அதேபோல, பல சர்க்கஸ் கம்பெனிகளுக்கும் சென்று வேலை கேட்டார். எல்லாரும் ஒன்றுபோல், அவரைச் சேர்த்துக்கொள்ள மறுத்துக் கொண்டே இருந்தனர். கடைசியாக, ஒரு சர்க்கஸ் கம்பெனியில் அவருக்கு மிருகங்களை அடைத்து வைக்கும் கூண்டுகளைச் சுத்தம் செய்யும் வேலை கிடைத்தது. அவ்வேலையில் இருந்து கொண்டே கிளைடுபெட்டி காட்டுமிருகங்களை ஆட்டிவைக்கும் வேலைகளைக் கற்றுக்கொண்டார்.