பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

95


காவலனான ஒரின் ஹென்றியின் பெயரைத் தழுவியே ஓ.ஹென்றி என்று இவர் வைத்துக்கொண்டார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் அற்புதமான கதைகளை எழுதிக் குவித்தார். அவருடைய புகழ் வளர வளர அவருடைய உடல் நிலை மோசமாகிக்கொண்டே வந்தது. 1908ம் ஆண்டு இவர் புகழ் ஏணியின் உச்சியில் இருந்தார். அதே சமயம் துன்பக் கேணியில் அதல பாதாளத்தில் சிக்கி அழுந்தினார். இந்தச்சமயத்தில் இவருக்கு மிக அதிகமாக வருமானம் வந்தும், அதை வைத்துக் காப்பாற்றத் தெரியவில்லை. போதாதற்கு பள்ளிப் பருவ சினேகிதி சாரா கோல்மன் என்பவளையும் கலியாணம் செய்து கொண்டார். அவர் நியூயார்க்கிற்குப் போனவுடன், நிமோனியா அவரைப் பிடித்துக் கொண்டது. 1910ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி காலிடோனியா என்ற தம்முடைய வீட்டில் தம் 47வது வயதில் இறந்து போனார்.

ஆளைப் பொருத்த மட்டில் ஓ. ஹென்றி ஆஜானுபாகுவானவர். கட்டுமஸ்தான உடலன்றி நல்ல திரண்ட தோள்கள். எப்போதும் கம்பீரமான ஒரு கவர்ச்சி. ஒரு தடவை தன்னைப் பேட்டி காணவந்தவரிடம் தன்னைப் பற்றி, “அப்படியானால் என்னை ஒரு திடமான கசாப்புக்கடைக்காரன் என்று சொல்லுங்கள்” என்றாராம். அந்தக் கசாப்புக் கடைக்காரன் தான் எழுத்தாளர்களிலேயே மிகக் கற்பனாசக்தி வாய்ந்தவராக விளங்கினார். இந்தக்