பக்கம்:வாழ்க்கை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

19


நம் உணர்ச்சியில் வாழ்க்கையாகத் தென்படுகிறது என்றால், இந்தக் கொள்கையுடையார் அது வெறும் கானல் நீர் என்பர். உயிருள்ள பொருள்களை விட்டுவிட்டு அஃறிணைப் பொருள்களை ஆராய்ந்து பார்த்தால் தான் வாழ்க்கையை அறிந்து கொள்ள முடியுமாம் ! அந்த ஆராய்ச்சியின் மூலம் அசேதனப் பொருள்களின் விதியை அறிந்து, அந்த விதியின் உதவியால் வாழ்க்கையின் விதியையும், மனித வாழ்வின் விதியையும் கண்டுபிடிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.[1]

இந்தப் போலிப் போதனையின் அடிப்படையான தவறு இதுதான் : வெளிப்படையாகத் தோன்றும் மனிதனுடைய மிருக வாழ்க்கையை மட்டும் எடுத்துக் கொண்டு, அதுவே அவனுடைய முழு வாழ்க்கை என்று வைத்துக்கொள்கிறது. மனிதன், விலங்குகள், தாவரங்கள், சடப் பொருள்கள் பற்றிய ஆராய்ச்சிகளிலெல்லாம் வெளிப்படையாகத் தெரியும் விஷயங்களையே பரிசீலனை செய்கிறது. உயிர் இயங்குவதால்


  1. உண்மையான விஞ்ஞானம் இப்படிக் கூறுவதில்லை. சக்தி, சடப்பொருள், உயிர் (Force, matter and life) ஆகிய மூன்றும் பரிசீலனைக்கு உரியவையல்ல என்று விஞ்ஞானத்தின் பல பிரிவுகளும் அவைகளை அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளன. ஆகவே, அவைகளை ஆராயாமல் மேற்கொண்டு செய்ய வேண்டிய ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளன. இத்தகைய விஞ்ஞானத்தால் கேடு விளையாது. ஆனால் தத்துவங்களை விளக்க முற்படும் போலி விஞ்ஞானம் அப்படியன்று. சடப்பொருள், சக்தி, உயிர் ஆகியவைகளைப் பற்றி ஆராய்ச்சி மூலமே அறிந்து விடலாம் என்பது அதன் கூற்று. அது சடப் பொருளையோ, சக்தியையோ, உயிரையோ, ஆராயவில்லை. அவைகளின் சம்பந்தங்களையும், உருவங்களையுமே (Relations and forms) ஆராய்ந்து கொண்டிருக்கிறது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/26&oldid=1121997" இலிருந்து மீள்விக்கப்பட்டது