பக்கம்:வாழ்க்கை.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.முன்னுரை

லியோ டால்ஸ்டாய் மாபெருங் கலைஞர் என்றும், இலக்கிய மேதை என்றும் உலகமே கொண்டாடுகின்றது. நம் நாட்டு அறிவாளரிடையே அவருடைய நூல்கள் அதிகப் புகழ் பெற்றிருக்கின்றன. டால்ஸ்டாய்க்கும் மகாத்மா காந்திக்கும் ஏற்பட்டிருந்த நெருங்கிய தொடர்பாலும், தீமையைப் பலாத்காரத்தால் எதிர்க்கக் கூடாது என்று அவர் போதித்த கொள்கையைக் காந்தியடிகள் பின்பற்றித் தென்னாபிரிக்காவிலும் இந்தியாவிலும் பெரிய இயக்கங்களை நடத்தி வந்ததாலும், அவருடைய நூல்களில் இந்திய மக்கள் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். முக்கியமாகத் தென்னாட்டில் ஆங்கிலத்திலுள்ள டால்ஸ்டாயின் நூல்களைப் படிப்பவர்கள் பலர் இருக்கின்றனர். இப்போது அந் நூல்களில் சில தமிழிலும் வெளிவந்திருக்கின்றன.

அறிஞர் டால்ஸ்டாய் கலைச்சுவை நிரம்பிய பல கதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார். இவை உலகத்தின் இலக்கியச் செல்வத்தோடு சேர்ந்துவிட்டன. அவருடைய நாடகங்களையும் பெர்னார்ட் ஷா போன்ற பல பெரிய ஆசிரியர்களே பாராட்டியிருக்கின்றனர். அவர் எழுதிய கட்டுரைகளும், கடிதங்களும், ஆராய்ச்சிகளும் அனந்தம். பண்பட்ட அவருடைய உள்ளத்திலிருந்து ஒரே வெள்ளமாகப் பெருகிக் கொண்டிருந்த கருத்துக்களும் கற்பனைகளும் பற்பல எழுத்தோவியங்களாக அமைந்திருக்கின்றன.

டால்ஸ்டாயின் கதைகளையும் நவீனங்களையும் மக்கள் படிக்கும் அளவுக்கு அவருடைய கட்டுரைகளைப் படிப்பதில்லை. அறிஞர்கள் ஆழ்ந்த கருத்துக்களுக்காக அவைகளைப் படிக்கலாம். காந்தீயவாதிகள் சிலர் கொள்கைக்காக அவைகளைப் போற்றலாம். பொதுவாக மற்றவர்கள் எல்லோரும் அவைகளை ஆர்வத்தோடு படிப்பதில்லை. இக் கட்டுரைகள் மதம், அரசாங்கம், பொருளாதாரம், சமூக அமைப்பு. ஒழுக்கம் முதலிய பல விஷயங்களையும் பற்றியவை. இவைகளில் ரஷ்ய மேதையான டால்ஸ்டாயின் ஆணித்தாரமான அபிப்பிராயங்களைக் காணலாம். ஆனால், கதைகளைப் படிப்பதுபோல் இவைகளை இலேசாகப் படித்துத் தள்ளிவிட முடியாது. இவைகளைப் பொறுமையோடு ஊன்றிப் படிக்க வேண்டியிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/4&oldid=1121471" இருந்து மீள்விக்கப்பட்டது