பக்கம்:வாழ்க்கை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

வாழ்க்கை


தான் வழக்கமாகப் போற்றி வந்த தனி வாழ்க்கையை உதறிவிட்டு வெளியேற முடிவதில்லை. ஆயினும், பழைய தனி வாழ்க்கையில் நம்பிக்யை அறவே போய் விடுகிறது. முதலில் தெளிவாகத் தெரியாவிட்டாலும், புதுவாழ்வில் மேலும் மேலும் நம்பிக்கை ஏற்படுகிறது இந் நிலையில் அவன் தன் மிருக வாழ்ககைக்கும் பகுத்தறிவு உணர்ச்சிக்கும் ஒரு புதிய சம்பந்தத்தை அமைத்துக் கொள்கிறான்.

மனிதன் உண்மையான மானிட வாழ்வில் புக ஆரம்பிக்கிறான். அவன் ஒரு புதுப் பிறவியாகவே தோன்றுகிறான். ஓர் உயிர் உலகிலே தோன்றுவது என்றால், அதற்குக் காரணம் அதன் இச்சையன்று. அது முதிர்ச்சியடைந்து, தன் பழைய நிலையில் தொடர்ந்து இருக்க முடியாததாலேயே பிறப்பு ஏற்படுகின்றது.

மனிதன் அறியாமலே பகுத்தறிவு உணர்ச்சி அவனுள் வளர்ந்து வருகிறது; வளர்ந்து தனித்த வாழ்க்கை இயலாதபடி தடுத்துவிடுகின்றது. இதன் பின்பு ஏற்படும் விளைவு, ஒரு விதை முளை விடுவதைப் போன்றது. வித்து பூமிக்குள் மறைந்து தன்னை அழித்துக்கொண்டு முளை வரக் காரணமாயிருக்கிறது. வித்து அழுகி மறையாவிட்டால், முளை வராது. புதிய முளைக்குப் பழைய வித்தே உணவாகிறது. முளை செடியாகி, மலர் பூத்த பிறகு, கனி உண்டாகிறது. கனிதான் புதிய செடி உண்டாவதற்கு வேண்டிய விதை. இவ்வாறு வித்திலிருந்து மறு வித்து உண்டாவதை- அதாவது உயிரின் ஒரு பரிணாம வளர்ச்சியை - நாம் நம் கண் முன்னாலேயே காண்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/49&oldid=1122068" இலிருந்து மீள்விக்கப்பட்டது